பக்கம் எண் :

சமூகம் - பாடங்கள்

(ஈ) மதப் படிப்பு

நான்கு வேதங்கள், ஆறு தர்சனங்கள்.உபநிஷத்துக்கள், புராணங்கள், இதிஹாஸங்கள், பகவத்கீதை,பக்தர் பாடல்கள், சித்தர் நூல்கள் - இவற்றை ஆதாரமாகக்கொண்டது ஹிந்து மதம். ஹிந்து மதத்தில் கிளைகள்இருந்தபோதிலும், அக் கிளைகள் சில சமயங்களில்அறியாமையால் ஒன்றை யொன்று தூஷணை செய்துகொண்ட போதிலும், ஹிந்து மதம் ஒன்றுதான். பிரிக்கமுடியாது. வெவ்வேறு வ்யாக்யானங்கள் வெவ்வேறு அதிகாரிகளைக் கருதிச் செய்யப்பட்டன. தற்காலத்தில்சில குப்பைகள் நம்முடைய ஞான ஊற்றாகிய புராணங்கள்முதலியவற்றிலே கலந்துவிட்டன. மத த்வேஷங்கள், "அனாவசிய மூட பக்திகள் முதலியனவே அந்தக் குப்பைகளாம். ஆதலால் தேசீயப் பள்ளிக்கூடத்துமாணாக்கர்களுக்கு உபாத்தியாயர் தத்தம் இஷ்டதெய்வங்களினிடம் பரம பக்தி செலுத்தி வழிபாடு செய்து வர வேண்டும் என்று கற்பிப்பதுடன், இதர தெய்வங்களைப்பழித்தல், பகைத்தல் என்ற மூடச் செயல்களை கட்டோடுவிட்டுவிடும்படி போதிக்க வேண்டும். 'ஏகம் ஸத் விப்ரா:பஹூதா வதந்தி' (கடவுள் ஒருவரே, அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர்) என்ற ரிக் வேதஉண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப் பதியுமாறுசெய்ய வேண்டும். மேலும், கண்ணபிரான் 'எல்லா உடம்புகளிலும் நானே உயிராக நிற்கிறேன்' என்று கீதையில் கூறியபடி, ஈ, எறும்பு, புழு, பூச்சி, யானை, புலி, கரடி, தேள், பாம்பு, மனிதர் - எல்லா உயிர்களும் பரமாத்மாவின் அம்சங்களே என்பதை நன்கறிந்து, அவற்றை மன மொழி மெய்களால் எவ்வகையிலும் துன்புறுத்தாமல், இயன்ற வழிகளிலெல்லாம் அவற்றிற்கு நன்மையே செய்து வர வேண்டும்' என்பது ஹிந்துமதத்தின் மூல தர்மம் என்பதை மாணாக்கர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். மாம்ஸ போஜனம் மனிதன் உடல் இறைச்சியைத் "தின்பதுபோலாகும் என்றும், மற்றவர்களைப் பகைத்தலும்அவர்களைக் கொல்வதுபோலேயாகும் என்றும் ஹிந்து மதம்கற்பிக்கிறது. 'எல்லாம் பிரம்மமயம்,' 'ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்ற வசனங்களால் உலக முழுதும் கடவுளின் வடிவமேஎன்று ஹிந்து மதம் போதிக்கிறது. 'இங்ஙனம் எல்லாம் கடவுள் மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும் பயப்படமாட்டான்,எங்கும் பயப்படமாட்டான்; எக்காலத்திலும் மாறாத ஆனந்தத்துடன் தேவர்களைப்போல் இவ்வுலகில் நீடூழி வாழ்வான்' என்பது ஹிந்து மதத்தின் கொள்கை. இந்த விஷயங்களெல்லாம் மாணாக்கருக்குத் தெளிவாக விளங்கும்படி செய்வது உபாத்தியாயர்களின் கடமை. மத விஷயமான போராட்டங்கள் எல்லாம் சாஸ்தர விரோதம்; ஆதலால், பரம மூடத்தனத்துக்கு லக்ஷணம். ஆசாரங்களை எல்லாம் அறிவுடன் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால்,ஸமயக் கொள்கைக்கும் ஆசார நடைக்கும் தீராத ஸம்பந்தம்கிடையாது. ஸமயக் கொள்கை எக்காலத்திலும் மாறாதது.ஆசாரங்கள் காலத்துக்கு காலம் மாறுபடும் இயல்புடையன.

ஸ்ரீீராமாயண மஹாபாரதங்களைப் பற்றி பிரஸ்தாபம் நடத்துகையிலே, நான் ஏற்கெனவே சரித்திரப் பகுதியிற் கூறியபடி, இதிஹாஸ புராணங்களில் உள்ள வீரர், ஞானிகள் முதலியோரின் குணங்களை நாம் பின்பற்றி நடக்க முயலவேண்டும். உண்மை,நேர்மை, வீர்யம், பக்தி முதலிய வேதரிஷிகளின் குணங்களையும்,ஸர்வதேச பக்தி, ஸ்வஜனாபிமானம், ஸர்வ ஜீவ தயை முதலியபுராதன வீரர்கள் குணங்களையும் பிள்ளைகளுக்கு நன்றாகஉணர்த்தவேண்டும். சிபி சக்கரவர்த்தி புறாவைக் காப்பாற்றும்பொருட்டாக தன் சதையை அறுத்துக்கொடுத்த கதை முதலியவற்றின் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டி மாணாக்கர்களுக்கு ஜீவகாருண்ணியமே எல்லா தர்மங்களிலும் மேலானது என்பதை விளக்கவேண்டும். ஏழைகளுக்கு உதவி புரிதல், கீழ் ஜாதியரை உயர்த்தி விடுதல் முதலியனவே ஜனஸமூஹக் கடமைகளில் மேம்பட்டன என்பதைக் கற்பிக்க வேண்டும்.