மாசம் நாற்பது ரூபாய் வீதம் மிச்சப் பணங்களைக்ஷேமநிதியாகச் சேர்த்து வந்தால் பதினைந்து "வருஷங்களுக்குள்ளே தகுந்த தொகையாய்விடும். பிறகு,மாஸவசூலை நிறுத்திவிட்டுப் பள்ளிக்கூடத்தை அதன் சொந்தநிதியைக்கொண்டே நடத்தி வரலாம். தவிரவும், அப்போதப்போது அரிசித் தண்டல், கலியாண காலங்களில் ஸம்பாவனை, விசேஷ நன்கொடைகள் முதலியவற்றாலும் பள்ளிக்கூடத்து நிதியைப் போஷணை செய்து வரலாம். எல்லாவிதமான தானங்களைக் காட்டிலும் வித்யாதானமே மிகவும் உயர்ந்தது என்று ஹிந்து சாஸ்த்ரங்கள் சொல்லுகின்றன. மற்ற மத நூல்களும் இதனையே வற்புறுத்துகின்றன. ஆதலால் ஈகையிலும் பரோபகாரத்திலும் கீர்த்தி பெற்றதாகிய நமது நாட்டில், இத்தகைய பள்ளிக்கூட மொன்றை மாஸ வசூல்களாலும், நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் அல்லது சிறு சிறு தொகைகளாகவும் சேகரிக்கப்படும் விசேஷ நன்கொடைகளாலும் போஷித்தல் சிரமமான காரியம் அன்று. இது மிகவும் எளிதான காரியம். இந்தப் பள்ளிக்கூடங்களை ஒரு சில மனிதரின் ப்ரத்யேகஉடைமையாகக் கருதாமல், கோயில், மடம், ஊருணி முதலியன போல்கிராமத்தாரனைவருக்கும் பொது உடைமையாகக் கருதி நடத்தவேண்டும். பொது ஜனங்களால் சீட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப் படுவோரும் ஐந்து வருஷங்களுக்கு ஒருமுறைமாற்றப்பட வேண்டியவருமாகிய பத்து கனவான்களை ஒரு நிர்வாக ஸபையாகச் சமைத்து அந்த ஸபையின் மூலமாகப்பாடசாலையின் விவகாரங்கள் நடத்தப்படவேண்டும். இந்த நிர்வாகஸபையாரைத் தெரிந்தெடுப்பதில் கிராமத்து ஜனங்களில் ஒருவர்தவறாமல் அத்தனை பேருக்கும் சீட்டுப்போடும் அதிகாரம் ஏற்படுத்த வேண்டும். |