பக்கம் எண் :

சமூகம் - தேசீயக் கல்வி (2)

ஸ்ரீமான் ஜினராஜ்தாஸரின் கருத்து

"கல்வியைப் பற்றிய மூலக் கொள்கைகள் எல்லா நாடுகளுக்கும் பொது. ஆனால், அந்தக் கொள்கைகளை வெவ்வேறு தேசங்களில் பிரயோகப்படுத்தும்போது இடத்தின்குணங்களுக்கும் ஜனங்களின் குணங்களுக்கும் தக்கபடி கல்வி வழியும் வெவ்வேறாய்ப் பிரிந்து தேசியமாகி விடுகிறது. இங்கிலாந்தின் கல்வி முறையில் பலவகை விளையாட்டுகளும் சரீரப் பயிற்சி முறைகளும் கட்டாயமாக ஏற்பட்டிருக்கின்றன. இத்தாலியில் அவை புறக்கணிக்கப்படுகின்றன. அங்கு கற்பனா சக்தியும், சிற்பம் முதலிய கலைகளும் தலைமையாகக் கொண்டகல்வியே பயிற்றப் படுகிறது. இதன் காரணம்: இங்கில"ாந்தில் பயிர் விளைவு குறைவு; ஆதலால், அநேக ஜனங்கள் வெளித் தேசங்களில் குடியேறி ஜீவனம் செய்தல் அவசியமாகிறது; அதற்குரிய குணங்களை ஆங்கிலக் கல்வி முக்கியமாகக்கருதுகிறது. அமெரிக்காவில், ஜனாதிகாரமே மேலான ராஜ்ய தர்மமென்றும், எத்தனை பெரிய ஏழையும் எத்தனை பெரிய செல்வனும் தம்முள் ஸமமேயன்றி அவர்களில் ஏற்றத்தாழ்வு கிடையாதென்றும், பிறரைச் சார்ந்து நிற்காமல் தன்மதிப்புடன் பிழைக்கத் தகுந்த கூலிதரும் எவ்விதமான கைத்தொழிலிலும்அவமானத்துக்கு இடமில்லை யென்றும் பாடசாலைகளில் முக்கிய போதனையாகக் கற்பிக்கிறார்கள். இந்தியாவில் மாத்திரம் சுதேசியக் கல்வி இல்லை. இந்நாட்டுக் கல்வி முழுதும் பிரிட்டிஷ் குணமுடையதாக இருக்கிறது. ஒரு வாரத்தில் இரண்டு மூன்று மணி நேரம் ஹிந்து தேசசரித்திரமும் தேச பாஷைகளும் கற்றுக்கொடுத்தால் போதாது. அதினின்றும் சுதேசிய ஞானம் ஏற்படாது. சென்னையில் 'பிரஸிடென்ஸி காலேஜ்' என்று சொல்லப்படும் மாகாணக் கலாசாலையின் கட்டடம் நமது தேசமுறையைத் தழுவியதன்று. பழைய இத்தாலிய வழியொன்றைஅனுஸரித்தது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் சர்வகலா சங்கங்களின் கட்டிடம் இத்தாலிய முறையிலா கட்டியிருக்கிறார்கள்?அதுபோலவே, பாரததேச முறைமைப்படி கட்டிய கட்டிடங்களில் கற்றுக்கொடுக்காத கல்வி இங்கு சுதேசீயக் கல்வி என்று சொல்லத் தகுந்த யோக்யதை பெறாது."

இது ஜினராஜதாஸர் சில தினங்களின் முன்பு சென்னைப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்திருக்கும் ஒரு வ்யாசத்தின் ஸாரமாம். இதில் கடைசி அம்சம் மிகவும் கவனிக்கத் தகுந்தது. நமது தேசத்து முறைப்படி கட்டிய கட்டிடத்திலேயன்றிப் பிறநாட்டு முறை பற்றிக் கட்டிய மனைகளிலேகூட தேசீயக் கல்வி பயிற்றுதல் ஸாத்ய மில்லை யானால், ஓஹோ, பாஷை விஷயத்தை என்னென்று சொல்ல்வோம்! தமிழ் நாட்டில் தேசீயக்கல்வி கற்பிக்க வேண்டுமானால், அதற்குத் தமிழே தனிக் கருவியாக ஏற்படுத்த வேண்டுமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?