பக்கம் எண் :

சமூகம் - தேசீயக் கல்வி (2)

தமிழ்நாட்டுப் பெண்கள்

தமிழ்நாட்டு ஸ்திரீகளையும் சேர்த்துக்கொண்டு, அவர்களுடைய யோசனைகளையுந் தழுவி, நடத்தாவிடின் அக்கல்வி சுதேசீயம் ஆகமாட்டாது. தமிழ்க் கல்விக்கும்,தமிழ்க் கலைகளுக்கும் தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க் கோயில், தமிழரசு, தமிழ்க் கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ்மாதரன்றோ?  இப்போது ஸ்ரீமதி ஆனி பெஸண்ட் தம்முடன் திலகர், ரவீந்த்ரநாதர் முதலிய மஹான்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு மீளவும்எழுப்பியிருக்கும் தேசீயக் கல்வி முயற்சியில் ஏற்கெனவேநீதிபதி ஸதாசிவ அய்யர் பத்தினி ஸ்ரீமதி மங்களாம்பாள் முதலிய ஓரிரண்டு ஹிந்து ஸ்திரீகள் ஸர்வ கலா சங்கத்தின் ஆட்சி மண்டலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது போதாது. தேசீயக் கல்வியின் தமிழ் நாட்டுக் "கிளையென ஒரு கிளை ஏற்படவேண்டும். அதன் ஆட்சி மண்டலத்தில் பாதித் தொகைக்குக் குறையாமல் தமிழ் ஸ்திரீகள் கலந்திருக்க வேண்டும். ஒரு பெரிய சர்வ கலா சங்கத்தின் ஆட்சி மண்டலத்தில் கலந்து தொழில் செய்யத்தக்க கல்விப் பயிற்சியும் லௌகிகஞானமும் உடைய ஸ்திரீகள் இப்போது தமிழ் நாட்டில் பலர் இலர் என ஆக்ஷேபங் கூறுதல் பொருந்தாது. தமிழ் நாடு முழுதும் தேடிப் பார்த்தால் ஸ்ரீமதி மங்களாம்பாளைப்போல இன்னும் பத்து ஸ்திரீகள்அகப்படமாட்டார்கள் என்று நினைக்க ஹேதுவில்லை. எதற்கும் மேற்படி ஆட்சி மண்டலம் சமைத்து, அதில் பத்துப் பெண்களைக் கூட்டி நடத்தவேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவனிடம் கூறினால். அதினின்றும் அவர்கள் பயன்படத்தக்க பல உதவி யோசனைகளையும் ஆண்மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புது ஞானங்களையும் சமைத்துக் கொடுப்பார்கள் என்பதில் ஸந்தேகமில்லை. முன் தமிழ் நாட்டை மங்கம்மா ஆளவில்லையோ? ஓளவையார் உலக முழுதும் கண்டு வியக்கத்தக்க நீதி நூல்கள் சமைக்கவில்லையோ?