பக்கம் எண் :

சமூகம் - பஞ்சமர்

லண்டனிலிருந்து மந்திரி மாண்டேகு வருவதற்கு முந்தி நமது தேசத்து பஞ்சமரை யெல்லாம் ஒன்று சேர்த்து விடுதலைக் கக்ஷியில் சேர்க்க வேண்டும் என்று சில சீர்திருத்தக்காரர் சொல்லுகிறார்கள். மிஸ்டர் மாண்டேகு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, நமது நாட்டுப் பறையரை உயர்ந்த நிலைமைக்குக் கொண்டுவருவது நம்முடைய கடமை.

பறையருக்கெல்லாம் நல்ல சோறு, நல்லபடிப்பு முதலிய சௌக்கியங்களும் மற்ற மனுஷ்ய உரிமைகளும் ஏற்பாடு செய்து கொடுத்தல் நம்முடைய கடமை. சென்னைப்பட்டணத்தில் நாயர் கக்ஷிக் கூட்ட மொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்பிராய பேதமிருந்தால், இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப்போட்டு அடிபிடிவரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள். இது நிற்க. அடுத்த நவம்பர்மாதம் பட்டணத்தில் பறையரை உயர்த்தவேண்டுமென்கிறநோக்கத்துடன் மகாசங்கம் நடத்தப் போவதாகக் கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். முற்காலத்தில் நந்தனார்தோன்றியதுபோலவே, இப்போது மேற்படியார் குலத்தில்ஸஹஜாநந்தர் என்ற ஸந்யாஸி ஒருவர். நல்ல பக்தராயும் ஸ்வனாபிமானம் உடையவராகவும் தோன்றியிருக்கிறார். அவருடைய முயற்சிகளை முன்னுக்குக் கொண்டுவரும்படி உதவி செய்ய விரும்புவோர் குத்திபில் ஸ்ரீ கேசவப் பிள்ளைதிவான் பகதூருக்கு எழுதி விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.மேற்படி ஸஹஜாநந்தர் சிதம்பரத்திற்கு அருகே ஒரு கிராமத்தில்பறைப் பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் போட்டிருக்கிறார்.அந்தப் பள்ளிக்கூடம் மே மாதம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு மண் கட்டிடம்; கூரை வேய்ந்திருக்கிறார்கள்.அதில் நானூறு பிள்ளைகள் வரை ஏற்கெனவே சென்றுபடிக்கிறார்கள்.

தியஸாபிகல் சங்கத்தார் சில பஞ்சம பாடசாலைகளைஏற்படுத்தி அந்த ஜாதியாரை மேன்மைப்படுத்தும் பொருட்டு மிகுந்த சிரத்தையுடன் உழைத்து வருகிறார்கள். ஸ்ரீமதி அனிபெஸண்டுக்கு இந்த விஷயத்தில் ஏற்பட்டிருக்கும்அன்பும் உத்ஸாஹமும் மெச்சத் தகுந்தன.

பகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஓளவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை,வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும் நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்துபோகவில்லை. சிறிது காலத்துக்கு முன்பு ஒரு கிழச் சாம்பான்என்னிடம் வந்து "முப்போதும் நீரில் முழுகிக் குளித்தால் முனிவர்களாவாரோ? எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ இரு பிறப்பாளராவார்?"  என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லிப் பறை யென்பதுஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகை யென்றும் அதைக் கொட்டுவோன் பறையன் என்றும், பறை யென்பது சக்தியின் பெயரென்றும்,அவளே ஆதியென்றும், சிவனே பகவன் என்று பிராமண ரூபங்கொண்டு அவளுடன் வாழ்ந்தானென்றும், பறையர் மேன்மைப்பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மையடைவார்கள் என்றும் பலவிதநீதிகளைச் சொன்னான். அதே கருத்துடையவராய் ஹிந்துக்களுடையவிடுதலையிலும் மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்துவரும் ஸ்ரீ நீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்டராயரும்,சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கைதூக்கி விடுவதில் தம்மால் இயன்ற வரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.''

''ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்''.

வந்தேமாதரம்.