பக்கம் எண் :

ஓம் சக்தி - இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை

[20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புது மனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின்முன்னே, "இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை" என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி செய்த பிரசங்கத்தின் ஸாரம்.]

இன்று மாலை எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிப் பேசு முன்பு, நான் அல்லாவின் மீது பாடிக்கொணர்ந்திருக்கும் தமிழ்ப் பாட்டை இங்கு வாசித்துக் காட்ட அனுமதி தரும்படி வேண்டுகிறேன். ஏற்கெனவே அரபி பாஷையில் 'பாத்திஹா' (ஜபம்) ஓதி முடிந்து விட்டது. அதற்கு அனுஸரணையாக இந்தத் தமிழ்ப் பாட்டைப் பாடுகிறேன்:

     பல்லவி

   அல்லா,  அல்லா,  அல்லா!

     சரணங்கள்

1. பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள் எல்லாத் திசையிலுமோ ரெல்லை வெளி வானிலே நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்,    சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாதபெருஞ்ஜோதி                             (அல்லா, அல்லா, அல்லா!) 

2. கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும்    பொல்லாதவ ராயினும் தவமில்லாதவ ராயினும்    நல்லாரை நீதியின்படி நில்லாதவ ராயினும்    எல்லோரும் வந்தேத்துமளவில்யமபயங் கெடச்செய்பவன்                           (அல்லா, அல்லா, அல்லா!)

எனக்கு முதல் முதல் இஸ்லாம் மார்க்கத்திலே அன்புண்டானதின் காரணம் பின்வருமாறு:-

பல வருஷங்களின் முன்பு நான் ஒரு ஆங்கிலேய பண்டிதர் எழுதிய புஸ்தகமொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன்.அதில் முஹம்மது நபியின் சரித்திரத்தைக் குறித்த சில விஷயங்கள்காணப்பட்டன. அவற்றைப் படித்துப் பார்த்தபோது, நான் அற்புதமுண்டாய்ப் பரவசமடைந்தேன்.