பக்கம் எண் :

ஓம் சக்தி - இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை

மக்கா நகரத்தில், பூஜாரிகளின் ஸபை கூடியிருக்கிறது. பிரமாண்டமான ஸபை. நாட்டிலுள்ள பூஜாரிகள் அத்தனை பேரும் சேர்ந்து கூடும் வருஷாந்தரக்கூட்டம் திருவிழாக் காலத்தை ஒட்டி நடந்தது; முஹம்மது நபி மேற்படி பூஜாரிகளின் வம்சத்தில் பிறந்தவர். அரபி தேசத்து ஜனங்கள் அந்தக் காலத்தில் விக்ரஹாராதனையிலும் பல தேவ உபாஸனையிலும் தற்காலத்தில் தணிந்த ஜாதி ஹிந்துக்கள் எத்தனை மூழ்கிக் கிடக்கிறார்களோ, அத்தனை மூழ்கிக் கிடந்தார்கள். அவர்களிடையே முஹம்மது நபியின் குடும்பத்தாரகோவிற் குருக்களையும் பட்டர்களையும் ஒத்திருந்தனர். இவர்களுடைய வைதிகக் கோஷ்டியின் ஸபைக்கு நடுவே முஹம்மது நபி எழுந்து நின்று சொல்லுகிறார்:- "நான் அல்லாவை நேரே பார்த்திருக்கிறேன். அவர் என்னைத் தமது முக்கிய பக்தராகவும் பிரதிநிதியாகவும் நியமனம் செய்திருக்கிறார். நீங்கள் இனிமேல் அவரைத் தொழுங்கள். அவரை மாத்திரம் தொழுதால் போதும். கடவுள் ஒருவர்தான் இருக்கிறார். பல ஈசுவரர் இல்லை. ஈசனைத் தவிர ஈசன் வேறில்லை. லா இலாஹா இல் அல்லா. அல்லாவைத் தவிர வேறு அல்லா கிடையாது. (அரபி பாஷையில் அல்லா என்ற பதத்திற்குக் கடவுள் என்று அர்த்தம்.)அவர் நம்மைப்போல தோலுடம்பும் கைகால் முதலிய உறுப்புக்களு முடையவரல்லர். அவரைச் சிலைகள் வைத்துத் தொழுவதிலும் அவருக்கு உங்களுடைய ஆகாரங்களை நைவேத்தியம் பண்ணுவதிலும் பயனில்லை. அவர்"எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றையும் இயக்கிக்காத்து எல்லாவற்றையும் வடிவுமாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் தம்முடைய உடம்புகளாகவும் தம்முடைய ரூபங்களாகவு முடையவர். அறிவு வடிவமாக நிற்பவர். அருள் வடிவமாக நிற்பவர். அவரை மனமாகிய கோயிலில் நிறுத்தி, வீரியம் பக்தி என்ற பூக்களால் அர்ச்சிப்பதேசரியான பூஜை. இடைவிடாமல் அசையாமல் அவரிடம் தீராதமாறாத பக்தி செலுத்துங்கள். அவ்விதமான பக்தி "இஸ்லாம்"என்று சொல்லப்படும். இந்த இஸ்லாமைத் தரித்திருப்போர் நித்தியானந்த வாழ்க்கையாகிய முக்தி வாழ்க்கையை எய்துவார்கள்.ஆதலால், நீங்கள் இந்தப் புராதனக் கிரியைகளையும் கொள்கைகளையும் விட்டுவிட்டு என் மதத்தில் சேர்ந்து அல்லாவின் திருவடி நிழலை அடைந்து வாழ முற்பட்டு வாருங்கள்" என்று முஹம்மது நபி யாண்டவர் திருவாய் மலர்ந்தருளினார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் அங்கிருந்த பெருச்சாளிக் குருக்களெல்லோரும் தங்கள் சிஷ்யர் ஸஹிதமாக முஹம்மது நபியைப் பரிஹாஸம் பண்ணினார்கள். அந்தச் சமயத்தில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் மருமகனாகிய அலி என்பவர் எழுந்து "மாமா, உங்கள் கொள்கையை யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, நான் நம்புகிறேன். லா இலாஹா இல் அல்லா முகம்மதூர் ரஜூல் உல்லா, அல்லாவைத் தவிர வேறு கடவுளில்லை. அவருக்குச் சிறந்த நபி முஹம்மது" என்று பிரதிக்கினை செய்து கொடுத்தார். இது ஒரு செய்தி.