இரண்டாவது செய்தி, முஹம்மது நபியைத் தமது குமஸ்தாவாகப் பல வருஷம் வைத்திருந்த பிறகு அவருக்கு மாலையிட்டவராகிய கதீஜா பீவியம்மை அவருடைய மதத்தில் சேர்ந்து கொண்டது. ஒருவன் தான் நேரே கடவுளைப் பார்த்ததாகவும் அதனின்றும் தெய்வங்கள் தன்னிடத்தில் விளங்குவதாகவும் வெளியூராரிடம் சொல்லி, அவர்களை நம்பும்படி செய்தல் எளிது. இரவு பகல் கூடவே யிருந்து, நீ நோய் வேதனை பொறுக்கமாட்டாமல் அழுவதையும் இன்னும் உன்னுடைய பலஹீனங்கள், அதைர்யங்கள், அச்சங்கள், அநீதிகள், குரூரங்கள், பொறாமைகள், அதர்மங்கள், குறைகள் எல்லாவற்றையும் ஸஹிப்போராகிய உன் சுற்றத்தாரும், அத்யந்த நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் உன்னைக் கடவுளின் அருளும் அம்சமும் அடைந்த மஹானென்று நம்பவேண்டுமானால், நீ உண்மையிலேயே தெய்வத்தைக் கண்டால்தான் முடியும். மற்றபடி ஏமாற்றலினாலும், வேஷங்களாலும், நடிப்புகளாலும் இவர்களை நம்பும்படி செய்தல் சாத்தியமில்லை. இதுபற்றியே,இங்கிலீஷில் "எந்த மனிதனும், தன் சொந்த ஊரில்"தீர்க்கதரிசியாக மாட்டான்" என்றொரு வசனம் சொல்லுகிறார்கள். முஹம்மது நபியை முதல் முதல் அலியும், அதை காட்டிலும் ஆச்சர்யந் தோன்றும்படி, கதீஜாபீவியும் கடவுளின் முக்கிய பக்தனென்றும், தெய்வ அருள் பெற்றவரென்றும் பூமண்டலத்தில் கடவுளுடைய பிரதிநிதியாக அவதரித்தமஹானென்றும் அங்கீகாரம் செய்து கொண்டதைக் கவனிக்குமிடத்தே, அவர் நிகரில்லாத ஞானி யென்பதும் பக்தகுல சிரோமணி யென்பதும் மிகத் தெளிவாக விளங்குகின்றன. மக்கத்தில் முஹம்மது நபிக்கு அநேகர் சீடராகச் சேர்ந்து விட்டார்கள். அவருடைய மதம் நாளுக்கு நாள் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டு பழைய விக்ரஹாராதனைக்காரருக்குப் பொறாமையும் அச்சமும்மிகுதிப்படலாயின. மக்கத்து அதிபதி, நபியவர்களையும் அவருடைய முக்கிய நண்பர்களையும் சீடரையும் பிடித்துச் சிறையிலிடும்படி, தன் சேவகரிடம் கட்டளையிட்டான். இந்தச் செய்தி நபி ஆண்டவனுடைய செவிக்கு எட்டி விட்டது. இது 622 கி.பி. வருஷத்தில் நடந்தது. அப்பால், சில நண்பரின் வேண்டுகோளுக்கும் அல்லாவின் உத்தரவுக்கும் இணைந்த முஹம்மது ஒரே ஒரு சீடருடன் மதினாவுக்குப் புறப்பட்டார். போகிற வழியில் காடு; இவ்விருவரும் தனியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஊரை விட்டுத் தப்பிய செய்தியறிந்து, மக்கத்து அதிபதி இவர்களின் பின்னே ஒரு குதிரைப் படையை அனுப்பினான். இவ்விருவரும் காட்டுவழியே போகையில், பின்னே குதிரைப்படைவரும் சத்தம் இவர்களுடைய காதிற் பட்டது. அங்கொரு புதருக்குள்ளே போய்ப் பதுங்கிக் கொண்டார்கள். குதிரைப் படையின் பாத ஒலி மிகவும் சமீபத்தில் கேட்டது. அப்போது நபியுடன் இருந்த "சீடர்:- "ஐயோ, இனி என்ன செய்யப் போகிறோம்? ஏது, நாம் தப்புவது கிடையாது. நம்மை இவர்கள் பார்த்துதான் போடுவார்கள். மக்கத்திற்குப் போனால் நம்மை வெட்டிக் கொல்வார்களோ, தூக்குத்தான் போடுவார்களோ!" என்று சொல்லிப் பலவாறு பரிதபிக்கலானான். அப்போது முஹம்மது நபி (ஸல்லல்லா ஹூ அலைஹி வஸல்லம்) அவர் சொல்லுகிறார்:- |