"கேளாய், நண்பனே; நான் இந்த உலகத்தில் அல்லாவின் காரியஸ்தனாக வேலை செய்து வருகிறேன். அல்லாவினால் எனக்கு மானுஷ லோகத்தில் நிறை வேற்றும்படி விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெல்லாம் நிறைவேறி முடியும் வரை, என்னைஉலகத்து மனனர்களெல்லோரும் ஒன்றுகூடிக் கொல்ல விரும்பினாலும் எனக்கொரு தீங்கும் வரமாட்டாது. என் தலையில் ஆயிரம் இடிகள் சேர்ந்து விழுந்தபோதிலும் எனக்கு மரணம் நேரிடாது. அல்லா ஸர்வ வல்லமை யுடையவர். அவருடைய சக்திக்கு மேற்பட்ட சக்தி இந்தஜகத்தில் வேறில்லை. ஆதலால் எனக்குப் பயமில்லை. என்னுடன் இருப்பதனால் உனக்கும் ஆபத்து வராது. நீயும்பயப்பட வேண்டிய அவசியமில்லை" என்றார். அப்பால் அந்தக் குதிரைப் படை அவர்களைப் பாராமலே போய்விட்டது. இந்தச் சமாசாரத்தை நான் வாசித்துப் பார்த்தவுடனே என் மனதில் முஹம்மது நபியிடமிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு மிகுதியாயிற்று ஸாதாரண காலங்களில் தைர்யத்துடனிருப்பது ஸுலபம். ஆபத்து நேரே தலையை நோக்கிவரும்போது "கடவுள் துணை செய்வார். எனக்குப் பயமில்லை"என்று மனதுடன் சொல்வோன் உண்மையான தெய்வ பக்தன். தெய்வ பக்தி ஒன்றைத் தவிர வேறெந்த சக்தியும் மனிதக் குண்டின் முன்னே தைர்யம் கொடுக்காது. சீறி வரும் பாம்பை நோக்கி அஞ்சாமல் நகைக்கவல்ல தீரர் கடவுளின் கருணை பெற்றோரேயாவர். மற்றப்படி வேறெந்த பலமும் அவ்விதமான தைர்யத்தைத் தராது. "பாம்பென்றால் படையும் நடுங்கும்." இன்னும், மதீனாவுக்கு நபி சென்ற பிறகு இதுவரை பல தடவைகளில் மக்கத்தாரின் கொரேஷ் படைகள் எதிர்த்து வந்தன. முஹம்மது நபியிடம் சேர்ந்தவர்கள் தக்க ஸைன்யப் பயிற்சி பெறவில்லை. பயிற்சி பெற்று வந்த படைகளைப் பயிற்சியற்ற மனிதர்களைத் துணைக்கொண்டு முஹம்மது நபி வென்றார். 'கலங்காத நெஞ்சுடைய ஞான தீரமும் அழியாத நம்பிக்கையும்' அவரிடத்தே யிருந்தன. ஆதலால் அவருக்கு எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி விடுத்தவாய் மொழிக் கெங்கணும் வெற்றி வேண்டும் முன்னர் அருளினர் அல்லா. இடையிடையே நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களைப்பற்றிச் சித்திரம் போட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப்பாலைவனத்தில், நள்ளிரவிலே தனி மணல் வெளியிலே, ஒட்டகையின் மீது தனியாக ஏறிக்கொண்டு போகிறார். அல்லது, அங்கொரு குன்றின் மேல் ஏறி நிற்கிறார். கேள்வியாலும், நெடுங்காலத்துப் பக்தியாலும், நிகரற்ற அன்பினாலும், ஞானத்தினாலும் பக்குவப்பட்ட இவருடைய ஹ்ருதயம் அப்படிப்பட்ட இடத்தில் அல்லாவை நாடுகிறது. வேறு நினைப்புக்கு இடமில்லை. |