பக்கம் எண் :

ஓம் சக்தி - புனர்ஜன்மம் (2)

பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் மர்மத்தினுடைய பலனாக அடுத்த ஜன்மத்தில் உயர்ந்த பிறப்பேனும் தாழ்ந்த பிறப்பேனும்கிடைக்கும் என்பது நமது தேசத்துப் பொது நம்பிக்கை.பாவம் செய்யும் ஒருவனை 'நீ அடுத்த ஜன்மம் மிருகமாகப் பிறப்பாய்' என்றால் அவனுடைய மனம்பதைக்கிறது. ஆனால், இந்த ஜன்மத்திலேயே தாம்மிருகங்களைப் போலிருப்பதைக் கவனிப்பது கிடையாது.ஒவ்வொரு நிமிஷத்திலேயும் ஒருவன் நினைக்கும் நினைப்புகளும் செய்யும் செய்கைகளும் அவன் பலவிதப்பிறவிகளை அடைவதற்குக் காரணமாகின்றன. இந்த உலகத்திலேயே, இப்பொழுதே, ஒரே சரீரத்திலுள்ள ஒருவன்ஆயிரம் பிறவிகள் பிறந்து மடிகிறான். ஒவ்வொரு க்ஷணமும்ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து பிறந்து மடிகிறான்; ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்துமாய்கிறான் என்று கூறத் தகும். மிருகங்களைப் போன்றமனிதர்களை நாம் பார்த்ததில்லையா?  நம்மை "நாம்கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களாயி ருந்திருக்கிறோம் என்பது தெரியும். வஞ்சனையாலும் சூத்திரத்தாலும் சமயத்திற் கேற்பப் பலவித கபடங்கள் செய்துஜீவிப்பவன் நரிதானே?  ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றைநினைத்துக் கொண்டு மனஞ்சோர்ந்து தலைகவிழ்ந்துஉட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. மறைந்திருந்து பிறருக்குத்தீங்கு செய்பவன் பாம்பு. தாமதத்திலும், புகழிலும் விருப்பமில்லாமல், அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன்பன்றி. சுயாதீனத்திலே இச்சையில்லாமல் பிறர்களுக்குப்பிரியமாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுத்ததை வாங்கிவயிறு வளர்ப்பவன் நாய், கண்ட விஷயங்களிலெல்லாம்திடீர் திடீர் என்று கோபமடைகிறவன் வேட்டைநாய். காங்கிரஸ்சபையிலேயும் சேர்ந்து கொண்டு, ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் ஹிதமாக நடக்க வேண்டுமென்ற விருப்பமுடைய ''மேத்தா'' கட்சியைச் சேர்ந்தவன் வௌவால்.அறிவுத் துணிவால் பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளாமல் முன்னோர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்பவாயினால் சொல்லிக் கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை.பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பறாக நடத்தியபோதிலும்,அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல் தமது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை. வீணமினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகின்றவன் வான்கோழி.கல்வியறிவில்லாதவனை மிருகக் கூட்டத்திலேயும் சேர்க்கலாகாது. அவன் தூண். தான் சிரமப்படாமல் பிறர்சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு. ஓர் நவீன உண்மை வரும்போது, அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக் கொண்டுஅஞ்சும்) ஆந்தை.

ஒவ்வொரு நிமிஷமும் "சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்துப் பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனேமனிதனென்றும் தேவனென்றும் சொல்வதற்குரியவனாவான்.மிருக ஜன்மங்கனை நாம் ஒவ்வொருவரும் க்ஷணந்தோறும்நீக்க முயலவேண்டும்.