பக்கம் எண் :

ஓம் சக்தி - அடங்கி நட

நமக்குள்ளே சில்லறைச் சண்டை, அற்பப்பகை, அற்பப் பொறாமைகளுக்கெல்லாம் இதுவன்றுகாலம். கஞ்சிக்குப் பிச்சைக்காரர் சண்டையிடுவது போலே,சிறு தயவுகளை விரும்பி நமக்குள்ளே சண்டைபோடும்காலம் சென்றது. இருட்டு மூலைக்குள் உட்கார்ந்து கொண்டு,நம்மை 'நாமே மஹான்கள்' என்று பாவனை செய்வதில்பயனில்லை. உலகத்தாரின் சபைகளில் நம்முடைய கர்வம்சிறுமைப்படுகிறது. சக்திஹீனர் போலே நாம் பிறரைக் குற்றங்கூறுதல் கூடாது. பல நூற்றாண்டு செய்த பாவம் பெருஞ்சுமையாய், நமதாண்மையை நசுக்கி நம் அறிவை மயக்கி விட்டது. அவற்றின் பெருஞ் சுமையைத் தள்ளி எறிய ஒருபெரிய முயற்சி செய்யக் காலம் இதுவேயாம். நாம் முன்னேபோகவொட்டாமல் இந்தச் சுமை பின்னே இழுக்கிறது. சென்றதை வருவதை வசியவித்தை போல கலங்கச் செய்கிறது. சென்றகாலப் புழுதியுஞ் சருகும் புதிய உதயத்தைமறைக்கின்றன. நம்முடைய புதிய இளமைத் தொழிலை அவை மூடுபனி போலே மறைக்கின்றன. நிஷ்பிரயோஜனம்என்ற அவமானத்திலிருந்து தப்ப விரும்பினால், இந்தச்சுமையைக் கூசாமல் வீசி எறிந்துவிட வேண்டும். மனுஷ்யஜாதி எப்போதும் முன்னே நோக்கிச் செல்லுகிறது; எப்போதும்விழிப்புடன் புது நிலங்களைத் தேடி மரணத்தை வெல்லுகிறது.ஜகத்தின் பெரிய சிற்பிக்கு வலக்கை போன்றது. உண்மையைக்கெஞ்சி அறிவுச் சுடர் கொளுத்திய வீதிவழியே செல்லும்பொழுது, யுகத்துக்கு யுகம் "வெற்றிகொண்டு முன்னேறும்போது,உலகம் முழுவதும். எதிரொலி கேட்கத் தனி ஆரவாரம் உண்டாகிறது. இந்த மனுஷ்ய ஜாதியுடன் நாம் ஸம நடையாகச்செல்ல விரும்பினால். இந்த முதுகுச் சுமையைக் கூச்சப்படாமல்வீசி எறிந்து விடவேண்டும்.

புறத்திலிருந்து நம்மீது இடைவிடாமல் அவமானமும்கஷ்டமும் பட்டுப்பட்டு தீண்டலாயிருப்பதைச் சுத்தி பண்ணித்தீர்க்கவேண்டும். 'தானாக விரும்பித் தான் உழைத்தல், என்னும்ஹோமத்தைச் செய்து, சுத்தி பண்ணவேண்டும். அந்த யாகத்தீயில் நம்முடைய பாவங்கள் வெந்துபோம். அஞ்ஞானப் புகைவிலகும். சோம்பற்குணம் சாம்பாலாகும்.

பெரிய தீ தேவா! நீ தீரன், தேவன்; எம்மிடத்தேமஹத்தாயும். துக்கரஹிதமாயும், நாசரஹிதமாயும் நாயக மாயும்அமரமாயும் உள்ள அம்சத்துக்கு நீ நாதன்,

அதனை உனது ராஜ ஸிம்ஹாஸனத்துக்கு வலக்கையாக அழைக்கிறாய். நம்முடைய சோர்வும், அறியாமையும் பழியுற்று, நமதடிமைக்குணம் தண்டனைப்பட்டு நம்மினின்றும் பிரிந்து செல்க; நன்மை விளைக.