பக்கம் எண் :

ஓம் சக்தி - உலக வாழ்க்கையின் பயன்

எல்லா வஸ்துக்களும் எல்லாக் குணங்களும்ஒன்றென்னும் வேதாந்த ஞானத்தால் இந்த அஞ்ஞானப்பழக்கத்தை நீக்கவேண்டும். மேற்படி ஞானம், உலகம் தோன்றிய கால முதலாக, எத்தனையோ பண்டிதர்களின் மனத்திலும் கவிகளின் மனத்திலும் உதித்திருக்கிறது; எத்தனையோ கோடிக்கணக்கான பாமரர் மனத்துள் அவைஅழுத்தாமல், வாயினால் பிதற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆயினும், பண்டிதர்களுக்கும் பாமரர்களுக்கும்ஒருங்கே அந்த ஞானத்தை நித்ய அநுபவத்தில் கொண்டுவரமுடியாதபடி, பழைய அஞ்ஞானம் தடுக்கிறது.

"அஞ்ஞானத்தை வென்றால், தீராத இன்பநிலையெய்தி வாழலாம், என்று சாஸ்திரம், யுக்தி, அநுபவம் - மூன்றுபிரமாணங்களாலும் விளங்குகிறது. எனினும், அந்த அஞ்ஞானப்பிசாசையும் அதன் குட்டிகளாகிய காமம், குரோதம், மோஹம்,லோபம், மதம். மாத்ஸர்யம் என்ற ஆறு யமதூதர்களையும் வெல்ல மனிதனுடைய சித்தம் இடங்கொடுக்கமாட்டேன் என்கிறது.நாயைக் குளிப்பாட்டி நல்ல உணவளித்து நடு வீட்டில் வைத்தால்.அது மறுபடியும் அசுத்த உணவு விரும்பி வாலைக் குழைத்துக்கொண்டு ஓடத்தான் செய்கிறது. எத்தனை புதிய இன்பங்களைக் காட்டியபோதிலும், மனம் அவற்றில் நிலைபெறாமல், மீண்டும் ஏதேனும் ஒரு துன்பக் குழியிலே கண்ணைத் திறந்து கொண்டுபோய் விழுந்து தத்தளிக்கத் தொடங்குகிறது.

மனம் கலங்கிய மாத்திரத்தில் புத்தி கலங்கிப்போய்விடுகிறது. ஆகையால், புத்தியை நம்பி எவனும் மனத்தைக்கலங்க விடாதிருக்கக் கடவன். மனத்தைக் கலங்க விடாமல்பயிற்சி செய்வதே எல்லாவித யோகங்களிலும் சிறந்த யோகமாகும்.மனம் தவறி ஒரு துன்பக் குழியில் போய் விழுங்காலத்தில், புத்திசும்மா பார்த்துக்கொண்டு நிற்கிறது. ஒரு வேளை புத்தி தடுத்த போதிலும், அதை மனம் கவனிப்பதில்லை. புத்தியை மீறி உழலும்சக்தி மனத்துக்கு இருக்கிறது.

ஆதலால், மனம் துன்பத்தில் நழுவி விழத் தொடங்கும்போது, அதை உறுதி அல்லது தைர்யம் என்ற கடிவாளத்தால் பிடித்துநிறுத்திப் பழகுவதே சரியான யோகப் பயிற்சியாம். இந்தப் பயிற்சிஏற்படுத்திக்கொள்ளுமாறு சிலர் உலகத்தை விட்டு நீங்கித் தனியிடங் களிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பழகுகிறார்கள். வேறு சிலர் மூச்சைப் பல இடங்களில் கட்டியும் அவயவங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிறார்கள்.  தனியே இருந்து ஜபம் பண்ணிப் பார்க்கிறார்கள்.

இதிலெல்லாம் இது வேகாது. உலகத்தாருடன் கூடி எல்லா வகைகளிலும் மற்ற உலகத்தாரைப் போலவே தொழில் செய்துகொண்டு உலக விவகாரங்களை நடத்திய வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங் கொடாதபடித் தன் மனத்தைக் கட்டக்கூடியதிறமையே பயன் தரக்கூடியது. மற்ற முயற்சிகளெல்லாம் வீண்.

நீதி, ஸமாதானம், ஸமத்துவம், அன்பு இவற்றாலேயேஇவ்வுலகத்தில் தீராத தைரியமும், அதனாலே தீராத இன்பமும் எய்தலாம். வேறு வழியில்லை.