பக்கம் எண் :

ஓம் சக்தி - உழைப்பு

ராமகிருஷ்ணர் 'நீ யுண்டு, நீ யுண்டு,நீ யுண்டு, நானில்லை, நானில்லை, நானில்லை' என்று ஜபம் பண்ணினார். அவர் சோம்பேறியா?  ஆஹா! ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உண்டாக்கினார். விவேகானந்தரோ புதிய பாரத தேசத்தை உண்டாக்கினவர்களிலமுதல் வகுப்பைச் சேர்ந்தவர்.

'உழைப்பு எப்போதும் உண்டு. தெய்வமே சரணென்றிருப்பார் உள்ளத்திலே தாபமில்லாமல் உழைப்பவர்களஆனபடியால், அவர்களுடைய செய்கைக்கு வலிமை அதிகம்,வேகம் அதிகம், உயர்வு அதிகம், அழகு அதிகம், பயன் அதிகம்' என்பது சொல்லாமலே விளங்கும்.

உழைப்பு எப்போதுமுண்டு. தெய்வத்தின் தலையிலேசுமையைப் போட்டுவிட்டு, நாம் கவலை, பயன் என்ற இரண்டுநாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்காமல், ஸந்தோஷமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு நிலத்தை உழுவது நல்லது. அழுதுகொண்டேஉழுதால் உழவுக்குக் கெடுதி; மனத்துக்கு ஸந்தோஷமில்லை; மடத்தன்மை தவிர வேறொன்றுமில்லை.

உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே நான் என்றபாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிறுகிறுவென்று வேகமாகவும் பிழையில்லாமலும் நடக்கும். தன்னைத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை குழம்பும்.

தன்னை மறந்து, வித்தையின் இன்பத்திலே தன் புத்திமுழுவதையும் செலுத்தி ஆடும் தாசி நன்றாக ஆடுவாள். நாம் அழகோ அழகில்லையோ?  வகுப்பு சரியாயிருக்கிறதோ இல்லையோ? நெற்றிப் பொட்டு நேரே விழுந்திருக்கிறதோ என்னவோ? பாதி ஆட்டத்தில் முன்னொரு முறை வயிற்று வலி வந்ததுபோல் வந்துவிடுமோ என்னவோ?  என்று தன் சித்தம் குழம்பிப் போயிருந்தால் ஆட்டம் நேரே வராது.

தன்னை மறந்து சகல உலகினையும்       மன்னி நிதங்காக்கு மகாசக்தி - அன்னை       அவளே துணையென் றமைவெய்தி நெஞ்சம்       துவளா திருத்தல் சுகம்.

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி       அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை - தஞ்சமென       வையமெலாங் காக்கு மகா சக்தி நல்லருளை       ஐயமறப் பற்றல் அறிவு.

வையகத்துக் கில்லை மனமே நினக்கு நலம்       செய்யக் கருதி யிவை செப்புவேன் - பொய்யில்லை       எல்லா மளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்       சொல்லால் அழியும் துயர்.

எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்       விண்ணிற் சுடர்கின்ற மீனை யெலாம் - பண்ணியதோர்       சக்தியே நம்மைச் சமைத்தது காண் நூறாண்டு       பக்தியுடன் வாழும்படிக்கு.