பக்கம் எண் :

ஓம் சக்தி - புராணங்கள்

வேதக் கொள்கைகளை எல்லா ஜனங்களுக்கும் தெளிவாக உணர்த்தும் பொருட்டுமுன்னோர்களால் புராணங்கள் ஏற்படுத்தப்பட்டன. 'நான்' 'எனது' என்ற அகந்தையாலும் பிறருக்குப் பலவிதங்களிலே தீங்கிழைப்பதும், தமக்குத்தாமே பலவிதமானஅச்சங்களும் தீங்குகளும் வருவித்துக் கொள்ளுதல் ஜீவர்களின் இயற்கை. இந்த இழிவு கொண்ட இயற்கையைஞானத்தீயிலே போட்டுப் பொசுக்கி விடுதல் வேத ரிஷிகளால்ஏற்படுத்தப்பட்ட யக்ஞம் அல்லது வேள்வியின் கருத்து.

எல்லாம் ஈசன் செயல்; எல்லாம் அவனுடையரூபம். கம்ப ராமாயணத்தில் ஹிரண்யனுக்கு ப்ரஹ்லாதாழ்வான் உபதேசித்தருளியடி, அவன்

   சாணிலு முளன்: மற்றாங்கோர்        அணுவினைச் சத கூறிட்ட    கோணிலும் உளன்; மாமேருக்        குன்றிலும் உளன்: இந்நின்ற    தூணிலும் உளன்: யான் சொன்ன        சொல்லிலும் உளன்.

அவனைத் தவிர வேறு பொருளே கிடையாது. 'அவனன்றி ஓர் அணுவு மசையாது' ஆதலால், இந்த உலக முழுவதும்பரிபூரண அழகுடையது; பரிபூரண மங்களத் தன்மை யுடையது.அந்தக் கடவுள் ஸர்வ சக்தியுடையவன். ஆதலால் கீதையிலேசொல்லியபடி, எல்லாப் பொறுப்புக்களையும் அவன் பாதங்களிலேசுமத்திவிட்டு, நாம் எப்போதும் கவலையின்றி ஆனந்தத்துடன்வாழும்படியாக நம் மனத்தைத் திருத்திக் கொள்ளக் கடவோம்என்ற துணிவே ஞானத் தீ என்று சொல்லப்படும். அது வேதாக்நி.

இங்ஙனம் நிச்சயிக்கப்பட்ட கடவுளிடத்தும், அவனுடைய கலைகளாகிய எல்லா ஜீவர்களிடத்தும், தீராத மாறாத அன்பு செலுத்துதலே பக்தி என்று சொல்லப்படும். இந்தப் பக்திதான் முடிவான ஸாதனம். இதனால் ஈசன் நம்மிடத்தேகருணை பூண்டு நமக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைக் கொடுப்பான்.இது அமிர்த பானம். இதுதான் நான்கு வேதங்களின் தீர்ப்பு.

இந்தக் கடவுளை முழுமையாக நோக்குமிடத்தே,வேதம் அவனுக்கு "தத்" (அஃது) அதாவது பரப்ரஹ்மம் என்றபெயரும், "ஸத்" (உண்மைப் பொருள்) முதலிய பெயர்களும்கொடுக்கிறது.

படைத்தல், காத்தல், மாற்றுதல், அருள் செய்தல்,வலிமையுடைமை, தெளிவுடைமை, ஒளியுடைமை, எங்கும்,பரந்திருக்குந் தன்மை, பலபடத் தோன்றுந் தன்மை,ஆனந்த இயல்பு முதலிய கடவுளின் எண்ணிறந்த குணங்களையும்இயல்புகளையும் பிரிவுபடுத்தி நோக்குமிடத்தே, வேதம் அந்தந்தக்குணங்களுக்கும் இயல்புகளுக்கும் தக்கபடி, அவன் ஒருவனுக்கேபிரமன், விஷ்ணு, சிவன், இந்திரன், வாயு, ஸோமன், ஸூர்யன்,வருணன், அக்நி, பகவான் முதலிய பலவேறு நாமங்களைவழங்குகிறது.

இந்த விஷயத்தை ரிக் வேதம் "ஏகம் ஸத்" என்றதொடக்கமுடைய மந்திரத்தில் மிகவும் தெளிவாக விளக்கிக்காட்டுகிறது.