‘அர்’ என்னும் வேர்ச்சொல் அர் (அறுத்தற் கருத்து வேர்) உல் - உர் - அர். உர் - உர - உரவு - உரசு - உரைசு - உரைஞ்சு. உரசு - உரோசு - உரோஞ்சு. உர் - உரி - உரிஞ் - உரிஞ்சு. உர - உரை - உராய். ரகர றகரம் இரண்டனுள்ளும் காலத்தால் முந்தியது ரகரமே. அதன் வல்வடிவே றகரம். றகரம் தோன்றாத முதுபண்டைக் காலத்தில், ரகரமே அதன் தொழிலை ஆற்றிவந்தது. எ - டு : முரிதல் - முறிதல் = வளைதல். “முரிந்து கடைநெரிய வரிந்தசிலைப் புருவமும்” (மணி. 18 161) பார் = பாறை. “இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.” (குறள். 1068) இவ் வெடுத்துக்காட்டுகள் பிற்காலத்து நூலினவாயினும், சொல்லளவில் முற்காலத்தனவே. அறுத்தல் என்னும் பொருளில் முதற்காலத்தில் வழங்கிய சொல் ‘அர்’ என்பதே. அது பிற்கால மொழிநிலையில், “ரகார ழகாரம் குற்றொற் றாகா” (தொல். 49) என விலக்கப்பட்டது. அர் - அரம் = அராவும் இருப்புக்கருவி. அர் - அரா - அராவு. அராவுதல் = அரத்தால் அறுத்துத் தேய்த்தல். |