அரம் - அரம்பு - அரம்பம் = மரமறுக்கும் ஈர்வாள். Te. rampamu. அரம்பு - அரம்பணம் = வெற்றிலை நறுக்கும் கருவி. அர - அரம்போற் கூரிய பல்லையுடைய பாம்பு. அர - அரா. அர - அரவு - அரவம் = பாம்பு. அரங்குதல் = 1. அறுபடுதல். 2. அம்புபோல் தைத்தல். “அம்பு.... அரங்கி முழுக” (சீவக. 293). 3. அழுந்துதல் (உரி. நி.). 4. தேய்தல். 5. வருந்துதல். “அரக்கர்கண் அரங்க” (கம்பரா. மூல. 81). 6. உருகுதல். ‘செம்பை அரங்கவை’ (உ. வ.). 7. அழிதல். “அரக்கரங் கரங்க” (திவ். திருச்சந். 32). அரங்கு = 1. (அறுக்கப்பட்ட கட்டடப்பகுதியாகிய) அறை. ‘அவ் வீடு அரங்கரங்காகக் கட்டப்பட்டுள்ளது’ (உ. வ.). 2. அறைபோன்ற நடன அல்லது நாடகமேடை. 3. நாடகசாலை. 4. சொற்பொழிவு அல்லது நூலுரைப்பு மேடை. 5. அவை. 6. பாண்டி அல்லது சில்லாக்கு என்னும் விளையாட்டிற்குக் கீறிய கட்டம். 7. கவறாட்டிற்கு வரைந்த கட்டம். 8. கவறாடும் இடம். அரங்கு - அரங்கம் = 1. நாடகசாலை. “ஆடம் பலமும் அரங்கமும்” (சீவக. 2119). 2. கவறாடும் இடம்(பிங்.) 3. படைக்கலம் பயிலும் இடம் (சூடா.). 4. போர்க்களம் (திவா.). 5. அவை (திவா.). 6. ஆற்றிடைக்குறை. “ஆற்றுவீ யரங்கத்து” (சிலப். 10 156). 7. திருவரங்கம் (திவ். பெரியதி. 5 7 1) அரங்கம் - Skt. ranga. ஆற்றிடைக் குறைகட்கெல்லாம் பொதுப்பெயரான அரங்கம் என்னும் சொல், திருவரங்கத்திற்குச் சிறப்புப் பெயராயிற்று. ஆற்றுநீரால் அறுக்கப்பெற்ற திட்டு அல்லது தீவு என்பது அதன் பொருள். அரங்கன் = அரங்கநாயகனான திருமால். “அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடேன்” என்றார் பிள்ளைப்பெருமா ளையங்கார். திருவரங்கம் என்பது பிற்காலத்தில் ஸ்ரீரங்கமென வடமொழியில் திரிந்தது. அரங்கு - அரக்கு (பி.வி.) அரக்குதல் = 1. தேய்த்தல். “கண்ணரக்கல்” (சினேந். 456). 2. சிதைத்தல் (சூடா.) 3. அழுத்துதல். “விரலால் தலையரக்கினான்” (தேவா. 223 11). 4. வருத்துதல். “எல்லரக்கும்............ இராவணன்” |