ஒண்டு - ஒட்டு, ஒட்டுதல் = பொருந்துதல். ம. ஒட்டு,க. ஒட்டு,து. ஒட்டு. ஒட்டார் = பகைவர். ஒட்ட = நெருங்க, ஒக்க, அடியோடு. ஒட்டுக்குடி = ஒண்டுக்குடி. ஒட்டுக்கும் = முழுதும். ஒட்டல் = 1. சேர்தல். 2. உடன்பாடு (திவா.) 3. உள்ளொ டுங்குதல். “ஒட்டற் கவுள்” (கோயிற்பு. நடரா. 30). ஒட்டப்போடுதல் = வயிறு ஒட்டுமாறு பட்டினியிருத்தல் அல்லது இருக்கச் செய்தல். ஒட்டு - ஒட்டை = ஒத்த அகவை அல்லது உயரம். ஒட்டை - ஓட்டை = ஒத்த அகவை அல்லது உயரம். இவன் அவனொட்டை, இவன் அவனோட்டை என்னும் வழக்குகளை நோக்குக. ஒட்டு - ஒட்டம் = கவறாடலில் எதிரியுடன் ஒட்டிக் கூறும் பந்தயம். ஒட்டு - ஒட்டாரம் = முற்கூறியதையொட்டியே இறுதிவரை மாறாது நிற்றல் (பிடிவாதம்). ஒட்டு = ஒன்றையொட்டியிடும் சூள் (ஆணை). “ஒட்டு வைத்தேனும் மேல்வாரீர்” (அருட்பா, 6, வருக்கமாலை, 89) ஒட்டு என்பது பிறர் ஒன்றைச் செய்யவிடுவதைக் குறிக்கும் துணைவினை. இது பெரும்பாலும் எதிர்மறையிலேயே வரும். எ - டு : தூங்கவொட்டார் = தூங்கவிடார். இதில் ஒட்டுதல் என்பது உளம்பொருந்துதலை அல்லது இசைதலை உணர்த்தும். ஒட்டு - அட்டு. அட்டுதல் = ஒட்டுதல். ஒ - அ ஒ.நோ. கொம்பு - கம்பு, மொண்டை - மண்டை, தொண்டையார்பேட்டை - தண்டையார்பேட்டை. |