பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

4

‘இள்’ என்னும் வேர்ச்சொல்

இள் (இணைதற் கருத்து வேர்)

உல் - ஒல். ஒல்லுதல் = பொருந்துதல்.

உல் - (இல்) - இள்.

இள் - இழை.

இழைதல் (செ.குன்றியவி.) 1. நெருங்கிப் பழகுதல். அவர்களிருவரும் இப்போது நிரம்ப இழைகிறார்கள் (உ.வ.) 2. கூடுதல். “இழைந்தவர் நலத்தை யெய்தி” (சீவக. 2720). 3. பிணைதல். பாம்புகள் ஒன்றோடொன்று இழையும். (உ.வ.). 4. மனம் பொருந்துதல். “இழையச் சொல்லி” (சீவக. 1593).

இழைத்தல் (செ. குன்றாவி.) = 1. பின்னுதல். “பாயிழைத்தல்” (யாழ்ப்பாண உ.வ.). 2. பதித்தல். “மணியினிழைத்த செய்குன்றின்” (நைடத. நகர, 6). 3. திரட்டி வைத்தல். “பொங்கரி னிழைத்த” (மாறன. ப. 294). 4. செய்தல். “இழைத்தவிச் சிற்றிலை” (திவ். நாய்ச். 2.2). 5. அமைத்தல். “பொற்பா விழைத்துக் கொளற்பாலர்” (சீவக. 4). 6. கூறுதல். “கிழவனை நெருங்கி யிழைத்து” (தொல். பொருள் 150)

இள் - (இண்) - இணர் = 1. பூங்கொத்து. “இணரூழ்த்து நாறா மலரனையர்” (குறள். 650). 2. காய்க்குலை. “இணர்ப் பெண்ணை” (பட்டினப். 18). 3. வழி மரபு. 4. இணரோங்கி வந்தாரை. (பழ. 72). இண் - இணகு = உவமை. “இணகிறந் தகன்ற பாசம்” (ஞானா. 45).

இணகு - இணங்கு (பெ.) = 1. இணக்கம். “உள்ளப் பெறா ரிணங்கை யொழிவேனோ” (திருப்பு. 288). 2. ஒப்பு. “இணங்காகு முனக்கவளே” (திருக்கோ. 68). 3. நட்பின - ன் - ள். “அவனது இணங்கு” (தொல், சொல். 80, சேனா.).