பெயர் ஒத்த மதிப்புள்ளோனையும் இரட்டைப் பன்மைப் பெயர் உயர்ந்தோனையும் குறிக்க ஆளப்பெற்றன. நீயிர், நீவிர், நீர் என்பன செயற்கை முறையில் திரிந்ததனாலும், நீங்கள் என்னும் சொல் வழக்குண்மையாலும், கள்ளீறு பெறா. உகரச்சுட்டு இற்றைத் தமிழ்நாட்டில் வழக்கற்றது போன்றே, முன்னிலைப் பெயர்களின் பல முன்னை வடிவங்களும் வழக்கற்றன. இவையெல்லாம் குமரிநாட்டில் வழங்கி வந்தவையே. உயரச்சுட்டு நிலத்தினின்று மேலெழும் மரஞ்செடிகொடிகட்கும், மண்ணி னின்று விண்ணிற்கெழும் பறவையினங்கட்கும், முன்னேற்றம் மேற்செலவா யிருத்தலால், உகரச்சுட்டு உயரக் கருத்தையும் தழுவலாயிற்று. உக்கம் = 1. தலை. “உக்கத்துமேலும் நடு” (கலித். 94) 2. கட்டித் தூக்கும் கயிறு. Te. uggamu, K. ugga, Tu. uggi. உகத்தல் = உயர்தல். “உகப்பே உயர்வு” (தொல். சொல். 306) உகலுதல் = குதித்தல். “உகலியாழ் கடலோங்கு பாருளீர்” (தேவா. 75 1) உகளுதல் = குதித்தல். “இரலை... யுகள” (குறுந். 6) உச்சம் = உயரம். உச்சம் - Skt. ucca. உச்சி = முடி, மீமிசை. K., M. ucci. உச்சாணி = எல்லாவற்றினும் உயரமானது. எ - டு : உச்சாணிக் கிளை. உத்தரம் = 1. உயரத்திலுள்ள விட்டம். 2. உயரமான வடதிசை. Skt. uttara. 3. வடவனல் (பிங்.) உத்தி = திருமகளுருவம் பொறித்த தலையணி. “தெய்வ வுத்தியொடு” (திருமுருகு. 23) |