உவச்சன் = ஓச்சன். உறி = உயரக் கட்டித் தூக்கும் தொடர். உன்னுதல் = மேலெழுதல். ஊர்தல் = ஏறிச்செல்லுதல். ஊர்தி = ஏறிச் செல்லும் விலங்கு, பறவை, வண்டி முதலியன. “ஊர்தி வால்வெள் ளேறே” (புறம். 1) மோனைத் திரிபு உ - ஒ - ஓ. ஒய்யாரம் = 1. உள்ளத் துயர்ச்சி. 2. அட்டோலகம் (ஆடம்பரம்) ஒயில் = 1. ஒய்யார நடை. 2. குதித்தாடும் கும்மிவகை. ஓங்குதல் = உயர்தல். ஓங்கு - ஓக்கு (பிறவினை). ஓக்கு - ஓக்கம் = உயர்ச்சி, பெருக்கம். ஓங்கல் = 1. உயர்ச்சி. 2. எழுச்சி. 3. மலை. 4. யானை. ஓச்சுதல் = உயர்த்துதல். ஓச்சம் = உயர்வு. “வெவ்வர் ஓச்சம் பெருக” (பதிற். 41 20) ஓவர் = ஏத்தாளர். “ஓவரும் பாட” (சீவக. 1844) பக்கத் திரிபு உ - அ. உம்பரம் - அம்பரம். அண் = மேல், மேல்வாய். அண்ணம் = மேல்வாய். அண்ணன் = மேலோன், மூத்த உடன்பிறந்தோன். அண்ணல் = தலைவன், அரசன். அண்ணாள்வி = அண்ணாவி = வினையாட்டுத் தலைவன். அண்ணாத்தல் = மேனோக்குதல், தலைநிமிர்தல். அணத்தல் = தலையெடுத்தல். அணர்தல் = மேனோக்கிச் செல்லுதல். அணர் = மேல்வாய்ப்புறம். அணர் - அணரி = மேல்வாய்ப்புறம். |