பின்னைத் திரிபு உ - இ. ஒ.நோ புரண்டை - பிரண்டை. முடுக்கு - மிடுக்கு. உவர் - இவர். இ - ஈ - எ - ஏ (மோனை) உ - எ. ஒ. நோ : குழுமு - கெழுமு. எக்குதல் = வயிற்றுப் பக்கத்தை மேலெழுவித்தல். எஃகுதல் = பஞ்சை மேலெழச் செய்தல். எட்டுதல் = உயர்ந்து தொடுதல். எடுத்தல் = தூக்குதல். எண்ணுதல் = மேன்மேற் கருதுதல், மேன்மேல் தொகையைப் பெருக்குதல். எத்துதல் = மேனோக்கி வெட்டியிழுத்தல் அல்லது உதைத்தல். எத்து = எற்று. எம்புதல் = எழுதல். எவ்வுதல் = குதித்தெழுதல். எழுதல் = உயர்தல், படுக்கைவிட்டெழுதல். எழும்புதல் = உயர்தல், படுக்கைவிட்டெழுதல். ஏ = உயர்ச்சி, பெருமை. “ஏபெற் றாகும்” (தொல். உரி. 7) ஏங்குதல் = நுரையீரலை யெழுவித்துப் பெருமூச்சு விடுதல். ஏண் = உயர்ச்சி. ஏண் - ஏணி = உயரச் செல்லும் கருவி. ஏண் - சேண் = உயர்ச்சி. ஏண் - ஏணை = தொங்கும் தொட்டில். ஏத்தாப்பு (ஏத்த யாப்பு) = மேலணியும் வல்லவாட்டு. ஏத்துதல் = உயர்த்திப் புகழ்தல், வழுத்துதல். ஏந்துதல் = உயரக் கையில் தாங்குதல், ஏந்தல் = குடிகளைத் தாங்கும் காவலன். ஏப்பம் = வயிற்றினின்று மேலெழுங் காற்று. ஏர்தல் = எழுதல். ஏலுதல் = கையால் அல்லது மனத்தால் ஏந்துதல். ஏறுதல் = மேற்செல்லுதல். |