உப்பக்கம் = பின்பக்கம், முதுகு. “ஊழையும் உப்பக்கம் காண்பர்” (குறள். 620) உம்பல் = வழிப் பிறந்தோன், பின்னோன். “நல்லிசைச் சென்றோ ரும்பல்” (மலைபடு. 540) பண்டைக்காலம் முற்காலம் எனப்படுதலால், அதற்கெதிரான வருங்காலம் பிற்காலம் எனப்படும். உத்தரம் = வினாவிற்குப் பின் தரும் விடை அல்லது மறுமொழி. உத்தரவு= வேண்டுகோட்குப் பின் தரும் விடையோலை. உம்மை = மறுமை. “உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்” (நாலடி. 58) செய்யும் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்றின் உம்மீறும், உகரச்சுட்டடிப் பிறந்ததே. “ஆறைங் காதம்நம் அகனாட் டும்பர்” (சிலப். 10 42) என்னுமிடத்து உம்பர் என்னும் சொல் அப்பால் என்று பொருள் படுவதாலும், உகரச்சுட்டு தமிழிலும் வழக்கற்றுப் போனதினாலும், அண்மையொடு ஒப்புநோக்கின் முன்மை சிறு சேய்மையாதலாலும், தமிழை அடிப்படையாகக் கொண்ட வடநாட்டு மொழிகளில் உகரம் சேய்மைச் சுட்டாகவே வழங்கிவருகின்றது. எ - டு : உதர் (இ.) = அங்கே. உங்கு (சாட்டு Jhat) = அங்கே. உயர்வுக் கருத்தில் மிகுதிக் கருத்தும் கலந்திருத்தலால், உகரச்சுட்டு அல்லது அச் சுட்டடிச் சொல் சிறுபான்மை மிகுதிப் பொருளையும் உணர்த்தும். எ - டு : ஊங்கு = மிகுதி (சூடா.) நூங்குதல் = மிகுதல் நூங்கு = மிகுதி |