பக்கம் எண் :

59

(திருமுருகு. 1). 8. உயர் குணம் (பிங்.). 9. ஒழுக்கநடை. “ஒழுக்க நடையே யுலகம தாகும்” (மாறன. 320).

உலகம் -வ. லோக,இ.லோக்.

‘லோக்’ என்னுஞ் சொற்கு வடவர் கூறும் பொருட் கரணியம் பார்க்கப்படுவது என்பது இதன் பொருந்தாமையை அறிஞர் காண்க.

“காலம் உலகம் உயிரே உடம்பே” என்னும் தொல்காப்பிய நூற்பா (541) ‘காலம்’ என்னும் சொல்லைத் தென்சொல்லாகவே கொள்ளுதலையும் நோக்குக.

உலம் வருதல் = 1. சுழலுதல். 2. நெஞ்சு உழலுதல். “உயிர்க்கும் உசாஅம் உலம்வரும்” (கலித். 145 4).

உலம்வா - உலமா. உலமருதல் = 1. சுழலுதல். 2. உழலுதல். “புலம்பியா முலமர” (கலித். 83 2).

உலம்வரல் - உலமரல் = 1. உழலுதல். 2. துன்பம் (சூடா.).

உலம் வருதல் - அலம் வருதல். உலமருதல் - அலமருதல். உலமரல் - அலமரல்.

உல் - உலா = 1. சுற்றிவரல். 2. அரசன் நகர்வலம் சுற்றிவரும் பவனி. “போந்தானுலா” (சங்கர. உலா.). 3. அரசனுலாப் பற்றிய பனுவல். “கலிவெண்பா வுலாவாம்” (வெண்பாப். செய். 27). உலாமடல் = ஒரு பனுவல் (இலக். வி. 857).

உலா - உலாம் = ஓர் உவமவுருபு.

“வேயுலாந் தோளினார்”         (சீவக. 1581)

உலா - உலாவு. உலாவுதல் = 1. சுற்றி வருதல். “நிலவு லாவிய நீர்மலி வேணியன்” (பெரியபு. பாயி. 1). 2. பவனி வருதல். 3. சூழ்தல். “தூசுலாய்க் கிடந்த” (சீவக. 550). 4. பரவுதல். “உயிரென உலாய தன்றே” (கம்பரா. ஆற்றுப். 20). 5. இயங்குதல். “வந்துலாய்த் துயர்செய்யும் வாடை” (பு. வெ. 8 16, கொளு).

ம. உலாவு.

உலா - உலாத்து. உலாத்துதல் = (செ. குன்றியவி.) உலாவுதல். (செ. குன்றாவி.). 1. உலாவச் செய்தல். 2. பரவச் செய்தல். ம. உலாத்து.

உலாத்துக் கட்டை = கதவு நின்றாடுஞ் சுழியாணி. உலாத்து - உலாத்தி. கொண்டை யுலாத்தி = ஒரு குருவி. உலா - உலாஞ்சு. உலாஞ்சுதல் = 1. தலை சுற்றுதல். 2. அசைந்தாடுதல். கப்பல் உலாஞ்சுகிறது (உ.வ.).