அலவு - அலகு = 1. வளைந்த குறடு. 2. உயிரிகளின் கொடிறு. “அரணை அலகு திறக்காது.” (பழமொழி). 3. தாடை. 4. வளைந்த நெற்கதிர். “அலகுடை நீழ லவர்” (குறள். 1034). அலகு - அலக்கு = துறட்டுக்கோல். உல் - அல் - அல்லல் = துன்பம். “அழிவின்கண் அல்ல லுழப்பதாம் நட்பு” (குறள். 787). ம. அல்லல், க. அல்ல, தெ. அல்லரி. அல் - அல்லா. அல்லாத்தல் = துன்பமுறுதல். “வயவுநோய் நலிதலி னல்லாந்தார்” (கலித். 29) அல்லாடுதல் = 1. அலைதல். 2. தொந்தரவு படுதல். தெ., க. அல்லாடு. அல் - அல்லை = துன்பம். அல்லைதொல்லை = மிக்க துன்பம். அலத்தல் = 1. துன்பமுறுதல். “அலந்தாரை யல்லனோய் செய்தற்றால்” (குறள். 1303). 2. வறுமைப்படுதல். “அலந்தவர்க் குதவுதல்” (கலித். 133). அலந்தோன் = துன்பமடைந்தவன் (திருமுருகு. 271). கறிக்கு அலந்தவன் என்பது உலக வழக்கு. அலந்தை = துன்பம். அலந்தை - அரந்தை = துன்பம். அலந்தலை = 1. துன்பம் (திவா.). 2. கலக்கம். “இவள் பேச்சும் அலந்தலையாய்” (திவ். பெரியாழ். 3 7 1). அலங்குதல் = 1. அசைதல். “அலங்குளைப் புரவி” (புறநா. 2). 2. மனந் தத்தளித்தல். 3. இரங்குதல் (பிங்.). ம. அலங்ங.து. அலங்கு.தெ., க. அல்கு. அலங்கல் = அசையும் பூமாலை. அலக்குதல் = அசைவித்தல். “சங்கலக்குந் தடங்கடல்வாய்” (தேவா. 739 3). அலக்கழிதல் = வருந்துதல். “நானலக் கழிந்தேன்” (தேவா. 507 3) அலக்கழித்தல் = 1. அலைத்து வருத்துதல். (பணவிடு. கண்ணி. 177). 2. கெடுத்தல். “தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து” (தேவா. 236 1). |