அலசுதல் = (செ. குன்றியவி.) 1. அலைதல். “இறுநுசுப் பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு” (மணிமே. 9 7). 2. வருந்துதல். ‘திருஷ்டம் பலச நோற்கின்றான்” (கம்பரா. சூர்ப்ப. 18). 3. சோர்தல். ம. அலசுக, தெ., க. அலச்சு. (செ. குன்றாவி.) 1. ஆடையை நீரிற் கசக்கிக் கழுவுதல். 2. வாயடங்குமாறு திறம்படக் கடிந்து பேசுதல். அவனை நன்றாய் அலசிவிட்டான் (உ.வ.). து. அலசு, தெ., க. அலச்சு. அலசடி = துன்பம். அலம்புதல் = (செ.குன்றியவி.) அலைதல். “வண்டலம்புஞ் சோலை” (திவ். திருவாய். 2 8 11). (செ. குன்றா வி.) 1. அலைத்தல் (திவ். பெரியாழ். 4:2:1). 2. கழுவுதல். “வடிம்பலம்ப நின்றான்” (புறநா. 9, உரை). அலப்புதல் = 1. வாயசைத்தல். 2. வீண்பேச்சுப் பேசுதல். 3 பிதற்றுதல். “அலப்பிய தக்கன் பெருவேள்வி” (தேவா. 236 1). அலுங்குதல் = சிறிது அசைதல். அலுக்குதல் = சிறிது அசைத்தல். அலுங்கு - அனுங்கு. அனுங்குதல் = 1. அசைதல். 2. வருந்துதல். “பஞ்சனுங் கடியினார்” (சூளா. நகர. 25). அலுக்கு - அனுக்கு. அனுக்குதல் = 1. அசைத்தல். 2. வருத்துதல். அல் - அலு. அலுத்தல் = 1. அசைதல். 2. களைத்தல். 3. சோர்தல். அலுத்துப் புலுத்து = மிகக் களைத்து. க. அல, தெ. அலயு. அலுப்பு = தளர்வு, களைப்பு. ம., தெ., க. அலுப்பு. அலு - அலுவல் = 1. உடல் தளரச் செய்யும் வேலை. 2. வேலை. “சமய மிதுவென் றலுவ லிட்டு” (மீனாட்சி. பிள்ளைத். 70.) அல் - அலை. அலைதல் = 1. அசைதல். “அலைந்தன நாகம்” (கந்தபு. முதனாட். 50). 2. திரிதல். “புசிப்புக் கலைந்திடல்” (தாயு. சித்தர். 5). 3. வருந்துதல். |