பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

உச்சட்டை - ஒஞ்சட்டை = ஒல்லி.

உச்சந்தம் = தணிவு. உச்சந்தம் - ஒச்சந்தம் = தணிவு.

உறத்தல் = மிகச் சிறிதாதல்.

“உறக்குந் துணையதோர் ஆலம்வித் தீண்டி”     (நாலடி. 38)

உற - உறகு. உறகுதல் = ஒடுங்கித் தூங்குதல்.

“பறவை யரையா வுறகல்”         (திவ். பெரியாழ். 5 2 9)

K. oragu.

உறகு - உறங்கு. உறங்குதல் = 1. ஒடுங்குதல். “தண்டலைக்கா வுறங்கின” (தமிழ்நா. 132). 2. தூங்குதல். “உறங்குவது போலுஞ் சாக்காடு” (குறள். 339). 3. சோர்தல். 4. தங்குதல். “தாமரை யுறங்குஞ் செய்யாள்” (கம்பரா. நாட்டுப். 6).

K. oran’gu, M. urannu,

உறங்காப்புளி = இரவில் இலைகுவியாத புளிய மரம்.

உறங்கு - உறக்க (பி.வி.). M. urakku.

உறங்கு - உறக்கம் (தொ.பெ.). M. urakkam

உறண்டுதல் = மெலிதல், நோய்தல்.

உறண்டு - உறட்டு (பி.வி.).

உறட்டலன் = மெலிந்தவன், உடல்வற்றியவன்.

உறை = மிகக் குறைவானது.

“உறைவிற்குலா நுகலாள்விலை”      (திருக்கோ. 266)

உறையிடுதல் = பேரெண்ணைக் குறிக்க ஒன்று என்னும் சிற்றெண்ணைக் குறியாய்க் கொள்ளுதல்.

“உறையிடத் தேய்ந்திடும் இவ்வந்தி வானத் துடுக்குலமே”
            (அஷ்டப். திருவேங்கடத் தந்தாதி, 34)

உல் - ஒல் - ஒல்லட்டை = ஒல்லியானவன்.

ஒல் - ஒல்கு. ஒல்குதல் = 1. தளர்தல். “ஒல்க லுள்ளமொடு” (புறம். 135 8). 2. மெலிதல். “ஒல்குதேவியை” (கந்தபு. காமதகன. 61). 3. குழைதல். “ஒல்கு தீம்பண்டம்” (சீவக. 62). 4. சுருங்குதல். “ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்” (குறள். 136). 5. ஒதுங்குதல். “பொன்னலங்கல் காலசைப்ப வொல்கி” (சீவக. 595). 6. வறுமைப் படுதல். “ஓல்கிடத் துலப்பிலா வுணர்விலார்” (கலித். 25). 7. மனம் அடங்குதல்.””ஒல்காதார் வாய்விட்டுலம்புப” (நீதிநெறி. 72).