ஒல்கு - ஒஃகு, ஒஃகுதல் = பின்வாங்குதல், தோற்றல். “ஏற்ற தெவ்வருக் கொல்கினன்” (கம்பரா. பள்ளியடை. 106) ஒல்கு - ஒற்கு. ஒற்குதல் = 1. குறைதல். “ஒற்கா மரபிற் பொதியி லன்றியும்” (சிலப். 25 117) 2. தளர்தல். “ஒற்கா வுள்ளத் தொழியா னாகலின்” (மணிமே. 15 18) ஒற்கு - ஒற்கம் = 1. குறைவு. “ஒற்க மில்வளன்” (கந்தபு. மேரு. 70). 2. தளர்ச்சி. “ஒற்கத்தி னூற்றாந் துணை” (குறள். 414). 3. வறுமை. (தொல். சொல். 360). 4. அடக்கம். “”ஒற்கமின் றூத்தைவா யங்காத்தல்” (நீதிநெறி. 23). ஒஞ்சுதல் = நாணுதல். ஒஞ்சு - ஒஞ்சி. ஒஞ்சித்தல் = நாணுதல். ஒஞ்சு - ஒச்சம் (தொ.பெ.) = 1. குறை, குறைவு. 2. நாணம். ஒச்சித்தல் = நாணுதல். ஒச்சியம் = கூச்சம். ஒச்சி - ஒசி. ஒசிதல் = 1. நாணுதல். “கண்ணரக்கி நோக்கா தொசிந்து” (சீவக. 2541). 2. சாய்தல். “வாயருகு வந்தொசிந்து” (சீவக. 595). 3. நுடங்குதல். “மாந்துண ரொசிய வேறி” (சூளா. இரத. 44). 4. முறிதல். 5. ஓய்தல். 6. வருந்துதல். “நுண்ணிடை யொசியப் புல்லினான்” (சீவக. 989). ஒசிந்தநோக்கு = ஒதுக்கப் பார்வை. ஒடு - ஒடுங்கு. ஒடுங்குதல் = 1. சுருங்குதல். 2. குவிதல். “தாமரையின் தடம்போ தொடுங்க” (திவ். இயற். திருவிருத். 76). 3. ஒதுங்குதல். “மேலையோன் புடைதனி லொடுங்கியே” (கந்தபு. தாரகன் வதை. 164). 4. அடங்குதல். “என்னிதயமு மொடுங்க வில்லை” (தாயு. ஆனந்தமா. 9). 5. கீழ்ப்படிதல். 6. உள்ளொடுங் குதல், உட்கலத்தல். ஒடுங்கி = ஆமை. ஒடுக்கு = 1. கலங்களின் அதுக்கு. 2. அடக்கம். ஒடு - ஒடி. ஒடிதல் = முறிதல். ஒடித்துக் கேட்டல் = விலையைக் குறைத்துக் கேட்டல். ஒடி - ஒசி (மேற்காண்க). ஒ. நோ : குடவன் - குசவன், பிடி - பிசி (பொய்). |