பக்கம் எண் :

85

12

‘ஊது’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல்

ஊ - ஊது.

மாந்தன் மொழி இயற்கை மொழி (Natural Language), செயற்கை மொழி (Artificial Language) என இருநிலைப்படும். சுட்டுச் சொற்கட்கு முந்தியது இயற்கை மொழி; பிந்தியது செயற்கை மொழி. இவை முறையே முழைத்தல் மொழி (Inarticulate Speech), இழைத்தல் மொழி (Articulate Speech) எனவும் படும்.

இயற்கை மொழியைச் சேர்ந்த எழுவகை யொலிகளுள், ஒப்பொலி (Imitative) என்பது ஒன்றாம். அஃது அஃறிணையொலியும் உயர்திணை யொலியும் என இருவகை.

எ - டு :

அஃறிணையொலி : கூ, கூவு (coo), கரை (cry, crow), ஊள் - ஊளை (howl), பிளிறு (blare), இம் - இமிர் (hum).

உயர்திணையொலி : சப்பு (sup, sip), துப்பு (spit), முக்கு, விக்கு (hiccup), ஊம் (hum), ஆம் (haw), மூசு, ஊது.

உயர்திணை யொலிகள், வாயொலி, மூக்கொலி, மூச்சுக் காற்றொலி என மூவகையாம். சப்புதலும் துப்புதலும் வாயொலியுடனும், முக்குதலும் ஊங்கொட்டுதலும் மூக்கொலியுடனும், மூசுதலும் ஊதுதலும் மூச்சுக் காற்றொலியுடனும் நிகழும்.

மூச்சுக் காற்றும் மூக்குவழி வருவதும், வாய்வழி வருவதும் என இருவகைத்து. மூசுதல் மூக்குவழிக் காற்றாலும், ஊதுதல் வாய்வழிக் காற்றாலும் நிகழும். மூசுதலாவது, செவியுறுமாறு காற்றை வெளிவிட்டும் உள்ளிழுத்தும் உரக்க மூச்சுவிடுதல். மூசுமூசென்று இளைக்கிறான் என்னும் வழக்கை நோக்குக. மூசு - மூச்சு. ஒ. நோ : பேசு - பேச்சு. ஊதுதலாவது, நெருப்பெரித்தலும் விளைக்கணைத்தலும் சூடாற்றுதலும் துகளைப் போக்குதலும் முதலிய செயல்கட்கு, வாய்வழிக் காற்றை வெளிவிடுதல்.