ஊதாரி என்னுஞ் சொல்லை, உதார என்னும் வடசொல்லினின்று திரிந்ததாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி காட்டியிருப்பது, உண்மைக்கு மாறானதும் முற்றும் பொருத்த மற்றதுமாம். உதார என்னும் வடசொல் ஈகைத் தன்மையைக் குறிப்பதாகும், ஊதாரி என்னும் தென்சொல்லோ அழிப்பாளியைக் குறிப்பதாகும். அழிப்பாளி வீண்செலவு செய்பவனே யன்றி அளிப்பாளி யல்லன். தமிழுக்கு இம்மியும் உதவாது பிறமொழி வளர்ச்சிக்கு ஏராளமாய் வாரிக் கொடுக்கும் தமிழ அரசனை அல்லது செல்வனை, ஊதாரியெனின், அது மிகப் பொருத்தமே. ஊது - ம., க., தெ., து. ஊது. ஊது - ஊத்து - ம. ஊத்து = ஊதுகை. ஊது - ஊத்தம் - தெ. ஊத = வீக்கம். ஊது - ஊதை - 1. காற்று (திவா.) 2. வாடைக் காற்று. “பனிப்புலர் பாடி..... ஊதை யூர்தர” (பரிபா. 11 84). ‘ஊது’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல் 3. வளிநோய். “தலைவலி பன்னமைச்ச லூதை” (தைலவ. தைல. 7). ஊதை - Skt. vata (வாத.) ஊசு, ஊது என்னும் சொற்களிலுள்ள சகர தகரங்கள் வாய்வழிக் காற்றுப்பறிதலை உணர்த்துதலால், அவை ஆரிய மொழிகளிலும் வட திராவிட மொழிகளிலும் உள்ள c, t என்பன போல் (வெடி(ப்பு)த் தகைப்பொலிகள் (plosive stops) ஆகாவென்றும், இரட்டித்தவிடத்தே அங்ஙனமாகுமென்றும், அறிந்துகொள்க. தமிழ் குமரிநாட்டில் தோன்றிய தொன்மூதியன் மொழி யாதலின், அந் நிலமிருந்த இடத்தை யொட்டிய தென்னாட்டுத் தென்கோடியில் வழங்கும் தமிழொலிகளை, தமிழ் வாயிலாகத்தான் அறிய முடியுமே யன்றிப் பிற வடநிலத் திரிமொழிகள் வாயிலாய் அறிய முடியாதென்றும், அங்ஙனம் அறிய முயல்வார் குன்று முட்டிய குருடர்போல இடர்ப்படுவாரென்றும், அறிந்து கொள்க. hoot, v.i. & t., & n, 1. Make loud sounds........... (of steam whistle or motor car or driver) Sound (intr) ......... [ME. huten, imit.’’] ‘’hooter, n. I n vbl senses, esp. siren, steam whistle, esp. as signal for work to begi n or cease,’’ [Er] என்று ‘எருதந்துறை நடப்பு ஆங்கிலச் சிற்றகர முதலி’ (The Concise Oxford Dictionary of Current English) கூறுவதால், ‘ஊது என்னுஞ் சொல்லொடு hoot என்னும் சொற்கு ஒருமருங்கு தொடர் பிருக்கலாமோ என ஐயுற இடமேற்படுகின்றது. |