தெ. ஜென. சுல் - சூல் = 1. முட்டை. “ஞமலி தந்த மனவுச் சூலுடும்பின்’’ (பெரும்பாண். 132). 2. கரு. “இளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ’’ (புறம். 130 :2). 3. முகில்நீர் நிரம்பியிருக்கை. “சூன்முதிர் முகில்’’ (பரிபா. 20 :3). சூல் - சூலி = கருவுற்றவள். “சூலி முதுகிற் சுடச்சுட’’ (திருக்கை வழக்கம். கண்ணி, 12). ம. சூல், க. சூல், தெ. த்சூலு. சுல் - சுள் - சுளகு = வளைத்துப் பின்னும் புடைப்புத் தட்டு. சுள் - சுளி. சுளிதல் = திரிதல். சுளித்தல் = வெறுப்பால் முகத்தைத் திரித்தல். சுள் - சுளு - சுளுக்கு = நரம்புப் புரட்சி. ம., க. சுளுக்கு, து. உளுக்கு, தெ. இலுக்கு. சுளுக்குதல் = நரம்பு பிசகுதல். சுளி - சளி. சளிதல் = ஒரு பக்கம் சரிதல், சுற்றிவரச் சரிந்து சப்பளிதல். ம. சளி (க்க). சளி - சழி. சழிதல் = உடற்சதை சரிந்து தளர்தல். சழிவு நெளிவு = கோணல் மாணல். சுள் - சுழகு - சுழங்கு. சுழங்குறுதல் = சுழலுதல். “நெஞ்சகஞ் சுழங்குற’’ (காஞ்சிப்பு. பன்னிரு. 276). சுழலுதல் = 1. வட்டமாகச் சுற்றிவருதல். “சுழன்றிலங்கு வெங்கதிரோன்’’ (திவ். பெரியதி. 9 4 6). 2. உருண்டோடுதல், உருளுதல். “தேர்க்கா லாழியிற் சுழன்றவை’’ (பெருங். வத்தவ. 12 205). 3. பம்பரம் போற் சுற்றியாடுதல். 4. பித்தன் போல் உடம்பைச் சுற்றியாட்டுதல். “சுழலலுஞ் சுழலும்’’ (மணிமே. 3 111). 5. சுற்றித்திரிதல். “குழலின்படி சுழலும்’’ (கம்பரா. கங்கைப். 3). 6. காற்றிற் கப்பல் போல் அலைவு படுதல். 7. மனம் அலசடிப்படுதல். “சுழலுஞ் சுராசுரர்க ளஞ்ச’’ (திவ். இயற். 1 48) 8. பொறி மயங்குதல். “கண்ணுஞ் சுழன்று பீளையோடு’’ (திவ். பெரியதி. 7 4 1). ம. சுழலு (க). தெ. சுடியு. சுழலமாடுதல் = 1. விடாமுயற்சி செய்தல். 2. ஒருவரை அடிக்கடி கண்டு தொழுதல். சுழலி = மாந்த வலிப்புவகை. |