4. உறுதி. 5. உண்மை. 6. கலங்கா நிலைமை. “கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்’’ (குறள். 54). திண் - திண்ணம் = 1. வலிமை. 2. இறுக்கம். “திண்ண மாத்தொளிர் செவ்விளநீர்’’ (கம்பரா. எழுச்சி. 50). 3. தேற்றம். “பரகதி திண்ண நண்ணுவர்’’ (தேவா. 1111: 10). திண்ணன் = வலியன். “உரிமைப் பேருந் திண்ணனென் றியம்பு மென்ன’’ (பெரியபு. கண்ணப். 17). திண்ணிமை = மனவுறுதி. “திண்ணிமையோடு மெல்லச் சார்ந்தநின்’’ (திருவாலவா. 29:17). திண்ணியன் = 1. வலியவன். 2. மனவுறுதியுள்ளவன். “திண்ணிய ராகப்பெறின்’’ (குறள். 666). திண் - திண்ணகம் = 1. செம்மறியாட்டுக் கடா. 2. தட்டார் மெருகிடுங் கருவி வகை. “திண்ணகத்தாற் செய்யுந் தொழில்களை வல்ல பணித்தட்டார்’’ (சிலப். 6 :136, உரை). திண்ணகம் - திண்ணக்கம் = நெஞ்சுரம், நெஞ்சழுத்தம். திண் - திண்ணை= 1. மேடு. “தேனயாம் பூம்பொழிற் றிண்ணை’’ (சீவக. 1822). 2. வீட்டுத் திரணை. “ஆய்மணிப் பவளத் திண்ணை’’ (சீவக. 1126). திண் - திண்ணம் - திணம் = வலிமை. “திணமணி மாடத் திருவிடைக்கழியில்’’ (திருவிசை. சேந். திருவிடை. 5). திணம் - திணர். திணர்த்தல் = செறிதல். “வண்டு திணர்த்த வயல்’’ (திவ். திருப்பள்ளி. தனியன்). 2. கனமாகப் படிந்திருத்தல். “திணர்த்த வண்டல் கண்மேல்’’ (திவ். திருவாய். 6: 1: 5). திண் - திணி. திணிதல் = 1. செறிதல். “மண்டிணிந்த நிலனும்’’ (புறம். 2). 2. இறுகுதல். திணித்தல் = 1. செறிய உட்புகுத்துதல். “சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே’’ (திவ். பெரியாழ். 4:4 :5). 2. பதித்தல். “பொன்றிணி மணிமான’’ (கம்பரா. வனம்பு. 3). திணி - திணிகம் = செறிந்து நின்று பொரும் போர். திணி - திணிம்பு = செறிவு. “இருளின் கருந்திணிம்பை’’ (திவ். இயற். திருவிருத். 72). திணியன் = பயனற்ற தடியன். |