திண் - திணுகு - திணுங்கு. திணுங்குதல் = 1. செறிதல். “திணுங்கின விருள்’’ (திவ். திருவாய். 2:1:7 பன்னீ.). 2. உறைதல். “நெய்திணுங் கினாற்போல்’’ (திவ். திருமாலை. 2, வியா. ப. 15). திணுங்கு - திணுக்கம் = 1. செறிவு. 2. கட்டி. திண் - (திண்ணை) - திணை = 1. கூட்டம். 2. வகுப்பு. 3. இலக்கணப் பொருள் வகுப்பு. உயர்திணை, அஃறிணை. “ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே’’ (தொல். சொல். 1). 4. அகப் பொருளிலக்கண ஐந்நிலப் பகுப்புள் ஒன்று. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. 5. ஐந்நில மக்கள் காதலொழுக்கம். 6. அகப்பொருளின் எழுவகுப்புள் ஒன்று. கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை. 7. புறப்பொருளின் எழுவகுப்புள் ஒன்று. வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண். திண் - திண்பு = 1. செறிவு. 2. இறுக்கம். 3. வலிமை. 4. உறுதி. க. திண்பு. திண்பு - திட்பு = 1. செறிவு. 2. இறுக்கம். 3. வலிமை. 4. உறுதி. திட்பு - திட்பம் = 1. செறிவு. 2. சொற்பொருள்களின் உறுதி. “திட்பநுட்பஞ் சிறந்தன சூத்திரம்’’ (நன். 18). 3. வலிமை. “உருத்திட்ப முறாக்காலை’’ (காஞ்சிப்பு. திருநாட். 97). 4. மனவுறுதி. “வினைத்திட்ப மென்ப தொருவன்’’ (குறள். 661). 5. தேற்றம். திண் - திண்டு = 1. பருமன். 2. சிறுமேடை. 3. அரைவட்டமான பஞ்சணை. “திண்டருகு போட்டான்’’ (விறலிவிடு. 476). ம. திண்டு, தெ. திண்டு (d). திண்டு - திண்டி = 1. பருமன். “திண்டி வயிற்றுச் சிறுகட் பூதம்’’ (தேவா. 1225 :7). 2. தடித்தவள். 3. யானை. 4. அரசமரம். திண்டு - திட்டு = 1. மேட்டுநிலம். 2. மண்வெட்டிய இடத்தில் வெட்டாது விடப்பட்ட சிறு துண்டு. 3. ஆற்றிடைக்குறை “புளினத் திட்டிற் கண்ணகன் வாரிக்கடல்பூத்த’’ (கம்பரா. வானர. 8). 4. யானைகளைப் பிரித்து வைப்பதற்காகக் கட்டப்பட்ட இடைச்சுவர். 5. சிறு குன்று. 6. நூறு குதிரை காலாள் முதலியன கொண்ட படைத்தொகைப் பிரிவு. எ-டு: ஒரு திட்டுக் குதிரை. ம., க. திட்டு. திட்டு - திட்டாணி = மரத்தைச் சுற்றிய மேடை. “சத்திரச் சாலையு மொத்த திட்டாணியும்’’ (இராமநா. சுந். 4). திட்டு - திட்டம் = 1. நிலைபேறு. “மயிலைக்கட் டிட்டங் கொண்டார்’’ (தேவா. 1118: 1). 2. தேற்றம் (நிச்சயம்). “திட்டமாப் பரகதி சேர வேண்டிடில்’’ (செவ்வந்திப்பு. பிரமதேவ. 25). 3. உறுதியான |