ஏற்பாடு. “அவர்தந் திராணிக்குத் தக்க திட்டஞ் செய்வதுவும்’’ (பணவிடு. 26). 4. ஒரு வினையைச் செய்யும் வழிவகுப்பு. 5. ஒரு வினைக்குரிய வரவு செலவுக் கணக்கு. திட்டவட்டம் = முழுத் தேற்றமான வரையறை. திட்டு - திட்டை = 1. திண்ணை (திவா.). 2. மேட்டு நிலம். “மணற்றிட்டை சேர்ந்தான்’’ (சீவக. 514). 3. உரல் (பிங்.). ம. திட்ட. திட்டம் - திடம் = 1. உறுதி. “இன்றைக் கிருந்தாரை நாளைக் கிருப்பரென் றெண்ணவோ திடமில்லை’’ (தாயு). 2. வலிமை. “தாண்டுபரி தூண்டு திடசாலி’’ (தனிப்பா.). 3. தேற்றம். “வார்த்தை திடம்படக் கேட்டு’’ (தேவா. 171 4). 4. திடாரிக்கம். “பொறைதிட ஞானம்’’ (காசிகண். தீர்த். 7). 5. நிலைதவறாமை. “திடவிசும் பெரிவெளி’’ (திவ். திருவாய். 1 1 7). 6. உண்மை. “உயர்கதி பெறுவது திடனே’’ (தேவா. 617 2). திடம் - வ. த்ருட (drdha). திடம் - திடன் - திடல் = 1. மேட்டுநிலம். “திடலிடைச் செய்தகோயில்’’ (தேவா. 893:3). 2. பொட்டல் (திறந்தவெளி நிலம்). “திடலடங்கச் செழுங்கழனி’’ (தேவா. 562 :3). திடல் - திடர் = 1. மேட்டு நிலம். “திடர்விளங்கு கரைப் பொன்னி’’ (திவ். பெருமாள் 1: 11). 2. குப்பைமேடு (பிங்.). 3. சிறு தீவு. திடர் - திடறு. திடம் - திடாரி = அஞ்சா மனத்தன். திடாரி - திடாரிக்கம் = நெஞ்சுரம், அஞ்சாநெஞ்சம். துல் - தெல் - தெறு - தெற்று. தெற்றுதல் = 1. செறிதல். “கற்றவர் தெற்றிவா’’ (திவ். பெரியாழ். 1: 5 :8). 2. தொடுத்தல். “ஆய்பூந் தட்டத்தகத்தோடு தெற்றிய தாமம்’’ (பெருங். வத்தவ. 7:26). 7 3. பின்னுதல். “குடம்பைநூல் தெற்றி’’ (கல்லா. கணபதி.). தெற்று - தெற்றி = 1. திண்ணை. “இலங்குவளை மகளிர் தெற்றியாடும்’’ (புறம். 53). 2. மாடம் (பிங்.). 3. மேட்டிடம். “புற்றுந் தெற்றியும்காடும்’’ (S. I. I. III, 410). 4. தெற்றியம்பலம். கோயிலில் மேட்டிடமாக அமைந்த சித்திர கூடம். |