7. கள் கள் என்பது உணர்ச்சியை அல்லது புலனை மறைப்பது. கள் = மது, கள் - ம., க. கள், தெ. கல்லு, து. கலி. களித்தல் =கட்குடித்தல், மதுவுண்டல். களி = கட்குடியன். கட்கருத்தின் கிளை கள் - களி. களித்தல் = 1. கட்குடித்து மகிழ்தல். 2. கள்ளுண்டு வெறிகொள்ளுதல். “களித்தானைக் காரணங் காட்டுதல்’’ (குறள். 929). 3. மகிழ்தல். களி = 1. கள்ளுண்டு மகிழ்கை. 2. கள்ளுண்டு வெறிகொள்கை. “சான்றோர்முகத்துக் களி’’ (குறள். 923). 3. உள்ளச் செருக்கு. 4. மகிழ்ச்சி. 5. மதிமயக்கம் (திவா.). 6. யானை மதம். “கால வேகங்களிமயக் குற்றென’’ (மணிமே. 4 44). கள் = 1. கள்ளிற்கினமான தேன். ‘தேனுண்ணும்வண்டு. “கள்ளின மார்த்துண்ணும் வண்கொன்றை யோன்’’ (திருக்கோ. 295). களி - களிறு = 1. மதங்கொண்ட ஆண்யானை. “வேழக் குரித்தே விதந்துகளிறென்றல்’’ (தொல். 1533). 2. ஆண் பன்றி. “கேழற் கண்ணும் கடிவரை யின்றே’’ (தொல். 1534). |