5. திறமை. “ஆழ்கடலைக் கடைந்த துப்பனே’’ (திவ். திருவாய். 4:7:5). து - துவ்வு. துவ்வுதல் = 1. உண்ணுதல். 2. நுகர்தல் (திவா.). “துவ்வாநறவின் சாயினத் தானே’’ (பதிற். 60 12). 3. வலியுறுதல். “ஆன்ற துணையிலன்தான்றுவ்வான்’’ (குறள். 862). துவ்வு = 1. உணவு (யாழ். அக.). 2. ஐம்பொறி நுகர்ச்சி (சூடா.). 3. வினைப்பயன் நுகர்ச்சி (யாழ். அக.). துவ்வு - துவ்வை = பருகுதற் குரியது. துவ்வாமை = 1. உண்ணாமை. 2. நுகராமை. “துவ்வாமை வந்தக் கடை’’ (கலித். 22). 3. வறுமை. “துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும்’’ (குறள். 94). 4. வெறுப்பு. துள் - துன் - தூண் - தூணி = 1. அம்புக்கூடு. தூணி - வ. தூண. 2. நான்மரக்கால். “கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணி பதக்கென்று’’ (நாலடி. 387). தூணி - வ. ஸ்தூணா. துள் - தொள் - தொள்கு = பள்ளம் (W.). தொள் - தொள்ளல் = துளை (உ. வ.). தொள். தொள்ளை = 1. துளை. “தொள்ளைப் புலாற்பை’’ (திருப்பு. 289). 2. குழி. “தொள்ளை மன்றத் தாங்கண்’’ (புறம். 333). 3. துளையுடைப்பொருள் (யாழ். அக.). 4. மரக்கலம் (திவா.). 5. மரக்கால் (தைலவ. தைல. 135 17). 6. குற்றம். “தொள்ளை யுணர்வின் னவர்கள் சொல்லின்’’ (சீவக. 496). 7. அறியாமை. “தொள்ளை பூத்தலர்ந்த நெஞ்சிற் றக்கன்’’ (கூர்மபு. தக்கன்வே. 6). ம. தொள்ள, க. தொள்ள. தொள்ளைக்காது = 1. துளையிட்ட காது. 2. பெருந்துளைக்காது. 3. அணிநீங்கிய துளைக்காது. தொள்ளுதல் = 1. துளைத்தல் (திவா.). “செந்தீத் தொட்ட கருந்துளைக்குழலின்’’ (பெரும்பாண். 179). 2. நெகிழ்தல் (W.). தொள் - தொள்கு. தொள்கல் = துளைத்தல் (பிங்.). தொள்ளை - தொளை. தொளைத்தல் = 1. துளையிடுதல். “மணித் தோளையுந் தொளைத்தான்’’ (கம்பரா. நிகும்பலை. 123). 2. தொந்தரவு செய்தல். (உ. வ.). 3. புலனம் (விஷயம்) தெரிய ஆழம் பார்த்தல். (உ. வ.). |