பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

தேன் - தென் = இனிமை. “தென்னிசை பாடும் பாணன்’’ (திருவாலவா. 56:7).

தென் - தின் - இன் = 1. இனிமை. “இன்வள ரிளம்பிறை’’ (சீவக. 1008). 2. இனிய. “இன்சொ லினிதீன்றல் காண்பான்’’ (குறள். 99).

க. இன். ஒ.நோ : தொண்பது - தொன்பது - ஒன்பது.

இன் - இன்பு = இனிய நுகர்ச்சி. “வளநக ரம்ப ரின்பொடு புரியவர்’’ (தேவா. 553:8).

தெ. இம்பு, . இம்பு (p).

இன்பு - இன்பம் = 1. இனிமை. “கண்டு தண்டாக் கட்கின் பத்து’’ (மதுரைக். 16). 2. இனிய காமநுகர்ச்சி. “அறம்பொரு ளின்பம்’’ (குறள். 501). 3. திருமணம். “கொம்பனை யாளையும் .... குன்றனை யானையும் .... இன்பமியற்றினார்’’ (சீவக. 1980). 4. அகமகிழ்ச்சி (திவா.). 5. சொல்லும் பொருளும் சுவைபடுங் குணம். “சொல்லினும் பொருளினுஞ் சுவைபட லின்பம்’’ (தண்டி. 18).

இன் - இனி. இனித்தல் = 1. தித்தித்தல். 2. செவிக்கின்பந் தருதல்.

இனி - இனிமை = 1. தித்திப்பு (பிங்.). 2. இன்பம். “இனிமைகூர்ந்து’’ (திருவாலவா. 1 :18).

தெல் - தெர் - தெரி. தெரிதல் = செ. குன்றியவி. - 1. கண் காணுதல். அவனுக்குக் கண் தெரிகிறது. (உ. வ.). 2. பொருள் தோன்றுதல், தொலைவில் ஓர் உருவம் தெரிகின்றது. (உ. வ.). 3. தெளிவாதல், விளக்கமாதல். “தன்னால் நிகழ்ந்த தன்மை தானே தெரியச் சொன்னாள்’’ (கம்பரா. நகர்நீ. 37). 4. மனமறிதல். தெரிந்து செய்த தீவினை. (உ. வ.).

செ. குன்றாவி. - 1. அறிதல். “எல்லாந் தெரிந்த இறைவா’’ (தாயு. காண்பேனோ. 33). 2. செவியுற்றறிதல். “தெரிதல் நினைத லெண்ண லாகாத் திருமாலுக்கு’’ (திவ். திருவாய். 6 9 11). 3. ஆராய்தல். “திறந்தெரிந்து தேறப் படும்’’ (குறள். 501). 4. தெரிந் தெடுத்தல். “புனைமாண் மரீஇய அம்பு தெரிதியே’’ (கலித். 7). 5. அரித்தெடுத்தல் (திவா.). . தெரி (யுக). தெ. தெலியு.

தெரித்தல் = 1. வெளிப்படுத்துதல். “தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே’’ (கம்பரா. சிறப். 6). 2. சொல்லுதல் (திவா.). 3. குறிப்பிட்டு விளக்குதல். “தெரித்துமொழி கிளவி’’ (தொல். சொல். 56).