பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

குறிக்காது. “கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோடமர்ந்து’’ (திருவிளை. திருநாட். 56), நாட்டாண்மைக் கழகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் முதலியவழக்குகளை நோக்குக. திருக்குறளிற் சூது என்னும் அதிகாரத்திலேயே, கழகம் என்னும் சொல் சூதாடரங்கைக் குறிக்கலாயிற்று. கல - கள - களகு - கழகு - கழகம்.

கள் - கட்சி = 1. போர்க்களம். “கட்சியுங் கரந்தையும் பாழ்பட’’ (சிலப். 12. உரைப். 25). 2. ஒரு கொள்கைபற்றிய கூட்டம். 3. மரமடர்ந்த காடு. “கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினும்’’ (மலைபடு. 235).

கள் - கண். கண்ணுதல் = பொருந்துதல், “புடைகண்ணிய வொளிராழியின்’’ (இரகு. யாக. 17).

கண் - கண, கணத்தல் = கூடுதல். கண - கணம் = 1. கூட்டம் “கணங்கொண்டு சுற்றத்தார் கலலென் றலற’’ (நாலடி. 25), “மான்கணம் மறலா’’ (சிலப். 13 6). 2. படைப்பகுதி. கணம் - வ. கண (gana).

கணவர் = கூட்டத்தார். “பூத கணவர்’’ (கந்தபு. திருக்கயி. 8). ஆளுங் கணத்தார் = ஊராட்சியமைவார்.
கணம் - கணன் = தொகுதி. “கணனடங்கக் கற்றானு மில்’’ (சிறுபஞ். 31).

கணம் - கணகம் = 27 தேர்களும், 27 யானைகளும், 81 குதிரைகளும் 135காலாள்களுங் கொண்ட படைப்பிரிவு (பிங்.).

கணம் - கணந்துள் = கூட்டமாக வாழும் பறவையினம். “இருந்தோட்டருஞ்சிறை நெடுங்காற் கணந்துள்’’ (குறுந். 350).

கள் - கட்டு. கட்டுதல் = சேர்த்தல், பொருத்துதல், புனைதல், பிணித்தல், பூட்டுதல், உடுத்தல், தொடுத்தல், அமைத்தல், திரள்தல், நென்மூட்டை கட்டி அரசிறையாகச்செலுத்துதல். தாலி பூட்டி மணத்தல், செலவொடு வரவு பொருந்துதல், ஒத்தல், பொய்யாகப்புனைதல், மூடுதல், தடுத்தல், அடக்குதல்.

ம., தெ., க., து. கட்டு.

கட்டு = 1. பிணிப்பு. “கட்டவிழ்தார் வாட்கலியன்’’ (அஷ்டப். நூற்றெட். காப்பு). 2. மலப்பிணிப்பு. “கட்டறுத் தெனையாண்டு’’ (திருவாச. 549). 3. மூட்டை. 4. கட்டடம் (பிங்.). 5. கட்டுப்பாடு. 6. கட்டளை. “கட்டுடைக்காவலிற் காமர் கன்னியே’’ (சீவக. 98). 7. காவல். “மதுவனத்தைக் கட்டழித்திட்டது’’ (கம்பரா. திருவடி. 18). 8. அரண். “கட்டவை மூன்று மெரித்த பிரான்’’ (தேவா. 386 7).