கல் (கருமைக் கருத்துவேர்) அடிக்கருத்து (கருமை) குல் - குலவு. குலவுதல் = கூடுதல், கலத்தல். கலத்தற் கருத்தினின்று மயக்கக் கருத்தும், மயக்கக் கருத்தினின்று இருண்மைக் கருத்தும், இருண்மைக் கருத்தினின்று கருமைக் கருத்துந் தோன்றும். கல் + து = கஃறு - கருமைக் குறிப்புச் சொல். “கஃ றென்னுங் கல்லத ரத்தம்’’ (தொல். எழுத்து. 40, உரை) கல் - கன் - கன்னல் = கரிய வகையான கரும்பு (திவா.) கன்னங்கரிய, கன்னங்கறேல் (கன்னங்கரேர்) என்னும் வழக்குகளை நோக்குக. கல் - கால் = கருநிறம். “கால்நோய் மேனிக் கண்டகர்’’ (கம்பரா. உயுத். வானர. 21) கல் - கள் - கள்வு - கள்வன் = 1. கரிய யானை (பிங்.); 2. கரியவன் (பிங்.). 3. கருநண்டு. “புள்ளிக் கள்வன்’’ (ஐங். 21). 4. நண்டு வடிவான (கடக) ஓரை. கள்வன் -களவன் = கருநண்டு. “புள்ளிக் களவன்’’ (கலித். 88 10) கள் - கள (நன். 165, மயிலை.) - களா (திவா.) - களவு (ம. களவு. க. களவெ.) - களவம் = கரிய கனிவகை, அதையுடைய செடி. கள - களம். “காக்கையிற் கரிது களம்பழம்’’ (தொல். சொல். 79, உரை) களவம் - களகம் = கரிய பெருச்சாளி (திவா.), காரோதிமம் (black swan). |