பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

திவ்வியப் பிரபந்தம் பெரிய திருமொழி 6 வியாக்கியானத்திற் குறிக்கப்பட்டுள்ள ‘களகம்’ என்னும் ஓதிமப் பெயர், காரோதிமப் பெயராகவேயிருத்தல் வேண்டும்.

கள் - களம் = 1. கருமை (திவா.). 2. முகில்.

“கனைக் களமென’’ (அரிசமய. பரகா. 44).

களம் - களர் = கறுப்பு (சூடா.)

களவு - (களகு) - களங்கு = கருப்பு, கரும்புள்ளி, கறை.

“திங்கள்.......... உடற்களங்கால்’’ (பிரபுலிங். கைலாச. 6).

களங்கு - களங்கம் = 1. கறுப்பு (திவா.). 2. கரிய மறு (திவா.). 3. கரும்புள்ளியாகிய வயிரக் குற்றம். “காக பாதமுங் களங்கமும் விந்துவும்’’ (சிலப். 14 180), 4. குற்றம் (பிங்.), 5. துரு (சூடா.). 6. (கரிய) அடையாளம். “களங்கமொன்றிட்டு மண்ணுறுத்தி’’ (கந்தபு. மார்க்கண். 133). 7. (கருமைக்கு இனமான) நீலம் (சங். அக). களங்கம் - Skt. kalanka.

களங்கம் - களங்கன் = 1. மறுவுள்ள மதி (திவா.), 2. குற்றமுள்ளவன்.

கள் - காள் - காளி = 1. கூளித்தலைவியாகிய கரிய பாலைநிலத் தெய்வம். 2. கரிய மணித்தக்காளி (இராசவைத்.).

காள் - காளம் = 1. கருமை. “காளமா கிருளை’’ (சீவக. 2245). 2. முகில் (சது.). 3. பெருமழை (உவின்சிலோ அகர முதலி). காளம் - வ. கால.

காள் + ஆம்பி = காளாம்பி (கருங்காளான்).

காள் + ஆன் = காளான் (காளாம்பி, ஆம்பி).

முதலிற் கரிய ஆம்பியையே குறித்த காளாம்பி, காளான் என்னும் இருபெயர்களும், பின்னர் வெள்ளாம்பிக்கும் காராம்பிக்கும் பொதுப் பெயராகிவிட்டன.

“ஆவுதை காளாம்பி போன்ற’’ (களவழி. 36). இதிற் ‘காளாம்பி’ வெள்ளாம்பியைக்குறித்தது. காளான் என்று இருவகை யாம்பியையுங் குறிப்பது இற்றைய யுலகவழக்கு. காராம்பியைப் பேய்க்காளான் என்பர்.

அம் + காளி = அங்காளி.

அம் + காளி + அம்மை = அங்காளியம்மை - அங்காளம்மை - அங்கம்மை.

“அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூர்வழியாய் வரும்’’