பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

குண்டலி = 1. மூல நிலைக்கள (ஆதார) வட்டம். (ஒளவை. குறள் நினைப்புறு. 2). 2. தூயவுலகைத் தோற்றுவிக்கும் மூல மாயை (சி. போ. பா. 2 2, ப. 133). இதன்விளக்கத்தை என் ‘தமிழர் மதம்’ என்னும் நூலுட் காண்க.

குண்டலி (தூயமாயை) - வ. குண்டலினி.

குண்டி = 1. உருண்டு திரண்ட புட்டம். 2. குண்டி போன்ற அடிப்பக்கம். ம. குண்டி, க. குண்டெ, தெ. குட்டெ.

குண்டு - கண்டு = நூற்பந்து. கண்டு - கண்டகம் = வட்டமான மரக்கால்.

கண்டு - கண்டி = வட்டமான ஒரு கலம், ஒரு முகத்தலளவு, ஒரு நிறை. ம. கண்டி, தெ., து. கண்டி (kh), மரா. கண்டில் (kh).

கண்டி - கண்டிகை = 1. தோட்கடகம் (சூடா.). 2. ஒருவகைப் பறை (பிங்.).

கண்டிகை - கடிகை - 1. நாழிகை வட்டில். 2. நாழிகை (24 நிமைய நேரம்) (திவா.). 3. நேரம். 4. சடங்குகட்கு மங்கல நேரங் குறிப்பவன். “கண்ண னாரொடு கடிகையும் வருகென’’ (சீவக. 2362). 5. தோட்கடகம். “கடிகை வாளார் மின்ன’’ (சீவக. 2808). கடிகை - வ. கட்டிகா (ghattika).

இவ் வடசொற்கு நாழிகைப் பொருளேயன்றிக் கடகப் பொருளில்லை.

கடிகை + ஆரம் = கடிகையாரம் - கடிகாரம்.

ஒ.நோ : வட்டு - வட்டாரம், கொட்டு - கொட்டாரம்.

குளம் - குணம் - குணகு. குணகுதல் = வளைதல். குணக்கு = வளைவு. ‘நாய்வாலைக் குணக்கெடுக்கலாமா?’ என்பது உலக வழக்கு. குணக்குதல் = வளைத்தல்.

குணலை = நாணத்தால் உடல் வளைகை. “கூச்சமுமாய்ச் சற்றே குணலையுமாய்’’ (பணவிடு 310).

குணகு - குணங்கு. குணங்குதல் = வளைதல்.

குணகு - குணுகு. குணுகுதல் = வளைதல். குணுக்குதல் = வளைத்தல். குணுக்கு = இளமகளிர் காதிலணியும் கனத்த ஈய அல்லது பித்தளை வளையம்.

குணம் - குடம் = 1. உருண்ட வடிவான நீர்க்கலம் (பிங்.). 2. குடக்கூத்து. “நீணில மளந்தோ னாடிய குடமும்’’ (சிலப். 6:55). 3. குடஞ்சுட்டு என்னும் ஆவு (சூடா.). 4. கும்பவோரை (பன்னிருபா.