குர் - குறு - குறள் - குறண்டு. குறண்டுதல் = 1. வளைதல். 2. சுருண்டுகொள்ளுதல். குறண்டல் = கூனல். குறடு = வளைந்த பற்றுக் கருவி, குறடுபோற் பற்றும் நண்டு. தெ. கொரடு. குறழ்தல் = குனிதல். “அவனாங்கே பாராக் குறழா’’ (கலித். 65:10) குறு - கிறு - கிறுக்கு = தலச்சுற்று, கோட்டி (பைத்தியம்). கிறுக்கன்= பித்தன். தெ. கிறுக்கு. கிறுகிறுத்தல் = சுற்றுதல், தலைச்சுற்றால் மயக்கமாதல். தெ. கிரகிர (giragira). கிறுகிறுவாணம் = காற்றாடிபோற் சுற்றும் பொறிவாணம். Gk. guros, E. gyrate. குல் - குன் - குனி. குனிதல் = 1. வளைதல். “குனிவளர் சிலை’’ (சீவக. 486). 2. உடம்பு வளைதல். 3. வணங்குதல் (சூடா.). குனித்தல் = வளைத்தல். “குனித்த புருவமும்’’ (தேவா. 11:4). ம. குனி, க. குனி. குனுகுதல் = சிரிக்கும்போது முதுகு வளைதல். தெ. குங்கு. குள் - குண்டு = உருண்டை, உருண்டையான மணி, உருண்டையான வெடிகருவி (shot. bullet). தெ. குண்ட, க., மரா. குண்ட (gunda). குண்டூசி. குண்டுச்சம்பா, குண்டுமல்லிகை என்பவற்றில் குண்டு என்னுஞ் சொல்உருட்சி பற்றியது. உருட்சிக் கருத்தும் திரட்சிக் கருத்தைத் தோற்றுவிக்குமாதலால், குண்டு, குண்டன், குண்டை, குண்டாந்தடி, குண்டடியன், குண்டுக்கழுதை என்பவற்றை வளைவுக்கருத்து வேரடிப் பிறந்தனவாகவும் கொள்ள இடமுண்டு. குண்டான் = உருண்ட வடிவான கலம். குண்டான் சட்டி என்பது வழக்கு. குண்டான்- குண்டா. மரா. குண்டா (g). ஒருவன் சுருண்டு கிடக்கும் நிலை குண்டக்க மண்டக்கம் என்றும், ஒருவனைத் தலையுங்காலுஞ் சேர்த்துச் சுருட்டிக் கட்டும்வகை குண்டு ருட்டுக் கட்டு என்றும் சொல்லப்படும். குண்டு - குண்டலம் = 1. வட்டம். 2. சுன்னம். 3. வட்டமான காயம் (ஆகாயம்). 4. வளைந்த காதணி. வ. குண்டல. |