குத்து (கைப்பிடியளவு, திரட்சி) - கொத்து = 1. கைப்பிடியளவு. “ஒருகொத்துச் சோறு கொடு’’ (உ. வ.). 2. பிடிசோறு, சோறு. “அரும்புக்கும் கொத்துக்கும்வந்தார். ’’ (தனிப்பா. காளமே). 3. சோற்றிற் கீடாகத் தவசமாகக் கொடுக்குங் கூலி. 4. திரட்சி. 5. பூ காய் முதலியவற்றின் குலை. “கொத்துறு போது மிலைந்து’’ (திருவாச. 6 30). 6. குடும்பம். “கொத்தடிமை’’ (உ. வ.) 7. மக்கள் திரள். “அனைத்துக்கொத்துப் பரிஜனங்களும் (குருபரம்). கொத்து - கொந்து = 1. திரள். “கொந்தினாற் பொலியும் வீதி’’ (இரகு. இரகுவு. 53). 2. பூங்கொத்து. “கொந்தா ரிளவேனல்’’ (சிலப். 8, வெண்பா. 1). 3. கொத்துமாலை. “கொந்தார் தடந்தோள்’’ (திருக்கோ. 391). குட்டு - கொட்டு. கொட்டுதல் = 1. குளவி தேள் முதலியன கொட்டுதல். “கருங்குளவி கொட்டும்’’ (அரிச். பு. நகர்நீங். 41). 2. கம்மியர் சம்மட்டியால் அடித்தல். “கொட்டுவினைக் கொட்டிலும்’’ (பெருங். மகத. 4 16). 3. நெற்குத்துதல். “கொட்டி வீழுமி குத்தல்போல்’’ (பிரபுலிங். சித்தரா. 9). 4. தோள் புடைத்தல். “கொட்டி னான்றோள்’’ (கம்பரா. சம்புமா. 18). 5. அடித்தல். 6. மேளம் அடித்தல். “மத்தளங் கொட்ட’’ (திவ். நாய்ச். 6:6). கொட்டு = பறைப்பொது. கொட்டாட்டுப் பாட்டு - கொட்டும் ஆட்டும்பாட்டும். குத்து - குற்று. குற்றுதல் = நெல் முதலியன குத்துதல். “வெதிர்நெற்குறுவாம்’’ (கலித். 42). குள் - குறு. குறுதல் = 1. கிள்ளிப் பறித்தல். “பூக்குற் றெய்தியபுனலணி யூரன்’’ (ஐங். 23) 2. ஒழித்தல். “இச்சைமற் றாச்சிரயங் குற்றோன்’’ (ஞான. 61 : 19). ஒ.நோ: வெள் - வெறு. வெள்ளிலை - வெற்றிலை. குறுகுறுத்தல் = மனஞ்சான்று குத்துதல். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’’ (பழமொழி.) குறு (குறள்) - குறண்டு. குறண்டுதல் = 1. முட்போற் குத்துதல். 2. குத்திவறண்டுதல். குறண்டு - குறண்டி = 1. முட்செடி வகை. 2. தூண்டில் முள். குறண்டு - கறண்டு. கறண்டுதல் = வறண்டுதல். (பாதாள)க் கறண்டி= (பாதாள) வறண்டி. |