குந்து - கிந்து. கிந்துதல் = ஒற்றைக்காலால் நடத்தல். “கிந்தி நின்றாடும் அரிவையர்’’ (திருவிசை. கருவூ. திருக்கீழ்க். 11). ம. கித்து. குந்து - கொந்து = நொண்டி விளையாட்டு வகை. கொந்துதல் = ஒற்றைக்காலாற் குதித்தல். குந்து - குந்தளம் = குழற்கொத்து (பிங்.), பெண்டிர் தலைமயிர். “சந்தமலி குந்தளநன் மாதினொடு’’ (தேவா. 107 1). குந்தளம் - வ. குந்தல. குந்தளம் - கூந்தளம் = ஒருவகைப் பூ. “காந்தமணி கூந்தளம் பாவைநீண்டு’’ (சீவக. 1671). கூந்தளம் - கூந்தலம் - கூந்தல் = 1. கொத்தான பெண்டிர் தலைமயிர் (பிங்.). 2. மயில்தோகை. “கூந்தன் மென்மயில்’’ (கம்பரா. சித்திரகூட. 31). 3. மயிர்க்கற்றை, வாலுள்ள குதிரை. “கூந்த லென்னும் பெயரொடு’’ (பரிபா. 331). 4. கூந்தற்பனை. 5. கூந்தற் கமுகு. 6. குதிரைவாற் சாமை. (தைலவ. தைல. 17). ம. கூந்தல், க. கூதல். குந்தளம் - கொந்தளம் = பெண்டிர் தலைமயிர் (பிங்.). குத்து - கொத்து. கொத்துதல் = 1. மண்வெட்டியாற் குத்துதல். 2. அலகாற் குத்தியெடுத்தல். “கழுகு கொத்திடக் கலத்திடைக் கவிழ்ந்தனர்’’ (காசிகண். தக்கன் வேள்வியை. 48). 3. வெட்டுதல். 4. சீவுதல். 5. செதுக்குதல். “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து’’ என்னுங் குறளில், குத்து என்னுஞ் சொல் கொத்து என்னும் பொருளில் ஆளப்பட்டிருத்தலை நோக்குக. ம., க. கொத்து, வ. குட். கொத்து - கொத்தன் = கொத்துக் கரண்டியால் வேலை செய்யும் அல்லதுசெங்கலைக் கொத்தும் கட்டட வேலைக்காரன். கொத்துக் கணக்கு = கொத்தன் சம்பளக்கணக்கு. கொத்து - கொட்டு. கொத்து மண்வெட்டி - கொட்டு மண் வெட்டி. களைக்கொத்து- களைக்கொட்டு. கொத்து - கொந்து. கொந்துதல் = 1. குத்துதல். “கொந்தியயிலல கம்பால்’’ (பெரிய பு. கண்ணப். 145). 2. கொத்துதல். 3. மகளிர் கழற்காயாட்டத்தில், மேலெறிந்த காய் விழுவதற்கு முன் நிலத்திலுள்ள காய்களைக் கொத்துவது போற் பொறுக்கியெடுத்தல். 4. வெட்டுதல். கொந்தறுவாள் = முட்செடிகளை வெட்டியழிக்க உதவும் அறுவாள் வகை. |