பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

கத்தரிக்க வெய்தான்’’ (கந்தரலங். 22). 3. வெட்டி விலக்குதல், நட்புப் பிரித்தல். 4. பிரிந்து கவராதல்.

கத்தரி = கத்தரிக்கோல். கத்தரி - கத்திரிகை = கத்தரிக்கோல். “மயிரரி தற்கொரு கத்தரிகை தருகென’’ (பெருங். வத்தவ. 14: 7). கத்தரி - கர்த்தரீ (வ.).

குத்து - குத்தி - கத்தி - கதி. கதித்தல் = நேராதல். கதிக்க = நேராக. “கிழக்கே கதிக்கப் போ’’ (நெல்லை வழக்கு). செங்குத்து அல்லது நட்டுக்குத்துக் கருத்தினின்று நேராதற் கருத்துத் தோன்றிற்று.

குத்து - குந்து. குந்துதல் = 1. புட்டம் நிலத்திற்குத்த உட்கார்தல். 2. குத்துதல். 3. படிதல்.

ம., க. குந்து. ஒ.நோ : ME., E. squat, OF. quatir.

குந்து - குந்தம் = 1. குத்துக்கோல். “பூந்தலைக் குந்தங் குத்தி’’ (முல்லைப். 41). 2. வேல். “குந்த மலியும் புரவியான்’’ (பு. வெ. 4 7). 3. எறிகோல். “வைவா ளிருஞ்சிலை குந்தம்’’ (சீவக. 1678). 4. குதிக்குங் குதிரை. “வெற்றிசேர் குந்தம்’’ (திருவிளை. நரிபரி. 106). 5. திரண்ட வைக்கோற்படப்பு. செங்குந்தர் = குந்தங்கொண்டு பொருத படைமறவர் வழியினர். குந்து - குந்தாலம் = குந்தித் தோண்டுங் கருவி. குந்தாலம் - கூந்தாலம். குந்தாலம் - வ. குத்தால (dd).

குந்தாலம்- குந்தாலி = 1. குத்தித் தோண்டுங் கருவி. “குந்தாலிக்கும்பாரை வலிது’’ (திருமந். 2909). 2. கணிச்சி (பு. வெ. 9:38 உரை). குந்தாலி - கூந்தாலி. ம. குந்தாலி.

குந்தி நடத்தல் = முன்னம் பாதத்தை மட்டும் ஊன்றி நடத்தல்.

குந்தாடுதல் = நொண்டி விளையாடுதல் (கோவை வழக்கு).

குந்தாங் குச்சி = நொண்டி விளையாட்டு (கோ. வ.).

குந்தாளித்தல் = களித்துக் கூத்தாடுதல்.

குந்து - குந்தனம் = மணி பதிக்கும் இடம். “குந்தனத்தி லழுத்தின... ரத்தினங்கள்’’ (திவ். திருநெடுந். 21, வியா. ப. 175). தெ. குந்தனமு.

குந்து + அணை = குந்தணை = எண்ணெய் காய்ச்சுங் கலம் சிதையுமாயின் எண்ணெய் வீணாகாவாறு அடியில் வைக்கப்படும் இருப்பானைக் குவளை. (தைலவ. பாயி. 19).

குந்து - குந்தா = குண்டுக் குழாயின் (துப்பாக்கியின்) அடி. உ. குந்தா.