கும்பல் = கும்பல் நாற்றம். கும்பி வீசுகிறது என்னும் வழக்கை நோக்குக. கும்பு - கும்பி = 1. தழல். 2. சுடுசாம்பல். தெ. 7 எரிநரகம். “கும்பிகும்மு நரகர்கள்’’ (திவ். திருவாய். 3:7: 8). வடமொழியிலுள்ள கும்பீ என்னுஞ் சொல், கும்பத்தையன்றி நரகத்தைக் குறிக்காது. ஆதலால், கலத்திற் சமைத்தல் அல்லது கலத்தைச் சுடுதல் என்று பொருள்படும் ‘கும்பீபாக’ என்னும் தொடர்ச் சொல்லை, கும்பி (நரகம்) என்னும் தென்சொற்கு மூலமாகச் சென்னைப் ப. க. க. த. அகரமுதலி காட்டியிருப்பது, எத்துணைக் கயமையான தமிழ்ப் பகைமை என்பதை நோக்குக. தீயோர்க்குத் தீயுழி (நரகம்) கலஞ்சுடு சுள்ளையும் அடுகலமும் போன்றிருக்கின்றதாம்! கும்பியிடுசட்டி - கும்பிடுசட்டி = 1. கணப்புச் சட்டி. 2. தட்டார் நெருப்புச்சட்டி. தெ. கும்பட்டி, க. கும்பட்டெ. கும்பிநாற்றம் = கும்பல் நாற்றம். குண் - கண் - கண - கணம் = கணைநோய் (பிங்.). கணகணத்தல் = 1. எரிதல். 2. சுடுதல். கணகணவென்று எரிகிறது என்பது உலக வழக்கு. கண - கணப்பு = குளிர் காயும் தீ. கணப்புச்சட்டி = குளிர் காயும் நெருப்புச்சட்டி. கண - கணை = உடம்புக் காங்கைநோய். கணைச்சூடு என்பது வழக்கு. கண் - கடு. கடுத்தல் = 1. உறைத்தல். 2. நோவெடுத்தல். 3. விரைதல். “காலெனக் கடுக்குங் கவின்பெறு தேரும்’’ (மதுரைக். 388). 4. மிகுதல். “நெஞ்சங் கடுத்தது’’ (குறள். 706). 5. சினத்தல். “மங்கையைக் கடுத்து’’ (அரிச். பு. நகர்நீ. 110). 6. வெறுத்தல். பொன்பெய ருடையோன் தன்பெயர் கடுப்ப’’ (கல்லா. 5). ம. கடு. கடு - கடுப்பு = 1. தேட்கொட்டுப் போன்ற கூர் நோவு. “கடுப்புடைப் பறவைச் சாதி யன்ன’’ (பெரும்பாண். 229). 2. வெகுளி. “கடுநவை யணங்குங் கடுப்பும்’’ (பரிபா. 4 49). 3. வேகம். “மண்டு கடுப்பினிற் படரும் வாம்பரி’’ (சேதுபு. கத்துரு. 15). 3. கடும்புளிப்பு.
|