பக்கம் எண் :

67

“தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்’’ (புறம். 392). 4. உறைப்பு- காந்தல். கடுப்புக் கழிச்சல் = வயிற்றுளைச்சல் (சீதபேதி).

கடு - கடுகு = காரமுள்ளது. . கடுகு.

கடுகுதல் = 1. மிகுதல். “பசி கடுகுதலும்’’. 2. விரைதல். “கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்’’ (மணிமே. 14:80).

கடுகு - கடுகம் = 1. கார்ப்பு (திவா.). 2. சுக்கு மிளகு திப்பிலி என்னும்முக்கடுகங்களுள் ஒன்று. கடுகம் - . கடுக (katuka). கடு - காடு= மிகுதி. எங்குப் பார்த்தாலும் வெள்ளக் காடு. (உ. வ.).

கடு - கட்டம் = 1. கடுமை. 2. மெய்வருத்தம். கட்டம் - வ. கஷ்ட. ஒ.நோ : நடு - நட்டம்.

கஷ்ட என்னும் வளடசொற்குக் 'கஷ்' என்னும் வினை முதனிலையை ஐயுறவு மூலமாகக் குறித்துள்ளார் மானியர் வில்லியம்சு. ‘கஷ்’ என்னும் வினைச்சொற்குத் தேய் என்பதே பொருள்.

கட்டம் - காட்டம் = 1. எரிநோவு. 2. உறைப்பு. 3. குணவேகம். சாறாயம் மிகக் காட்டமாயிருக்கிறது. (உ. வ.).

தெ. காட்டு (g).

கடு - கடி = 1. விளக்கம். “அருங்கடிப் பெருங்காலை’’ (புறம். 166). 2. சிறப்பு. “அருங்கடி மாமலை தழீஇ’’ (மதுரைக். 301). 3. மிகுதி. “கடிமுரசியம்பக் கொட்டி’’ (சீவக. 440). 4. விரைவு. “எம்மம்பு கடிவிடுதும்’’ (புறம். 9). 5. உறைப்பு. “கடிமிளகு தின்ற கல்லா மந்தி’’ (தொல். சொல். 384, உரை). 6. அச்சம். “அருங்கடி வேலன்’’ (மதுரைக். 611). 7. பேய். “கடிவழங் காரிடை’’ (மணிமே. 9:49).

கடி - கரி. கரித்தல் = 1. மிகுதல். மிளகுநீர் உப்புக் கரிக்கிறது. (உ. வ.) 2. உறுத்துதல். எண்ணெய் பட்டுக் கண் கரிக்கிறது. 3. வெறுத்தல். “கரித்துநின்றான் கருதாதவர் சிந்தை’’ (திருமந். 2431). 4. பழித்தல்.

கரி - கரிப்பு = 1. காரம். “ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே’’ (தொல். சொல். 384). 2. உறுத்தம். 3. சுவைமிகை. 4. அச்சம் (திவா.). 5. வெறுப்பு.

கரி - காரம் = உறைப்பு, மிகுதி.

பலகாரம் = பல சுவைமிக்க சிற்றுண்டி.

காரம் = 1. உறைப்பு. 2. காரவுப்பு (W.), 3. சாம்பலுப்பு. 4. வண்ணான்காரம். 5. சாயக்காரம். 6. சீனிக்காரம். 7. வெண்காரம்.