பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

பொளித்தல் = 1. துளை செய்தல். “மாடத்தாங்கட் சாளரம் பொளித்த கால்போகு பெருவழி” (மணிமே. 4 52). 2. கிழித்தல். “களிறு... ஆச்சாவைப் பிளந்து அந்நாரைப் பொளித்து” (தொல். பொருளியல், 37, உரை).

பொளி = 1. உளியாலிட்ட துளை. 2. மண்வெட்டியின் வெட்டு. 3. பாய் பின்ன வகிர்ந்து வைக்கும் ஓலை. சிறு பொளிப்பாய் (நாஞ்சில் நாட்டு வழக்கு). 4. மண்வெட்டியாற் புல்லொடு சேர்த்து வெட்டிய வரப்பு மண்.

பொள் - பொளு. பொளுபொளுவெனல் = துளையிலிருந்து நீர்ப்பொருள் ஒழுகற் குறிப்பு.

புல் - புல் - புழு = துளைத்தரிக்கும் சிற்றுயிரி.

புழுத்தல் = 1. புழுவைத்தல். புழுத்த கத்தரிக்காய். புழுப்புழுத்துச் செத்தான் (உ.வ.). 2. புழுவரித்தல்.

புழு - புகு. ஒ.நோ.: தொழுதி - தொகுதி. தொழு - தொகு.

புகுதல் = 1. துளைத்தல்போல் உட்செல்லுதல். வீட்டுக்காரர் வீட்டுக்குட் புகுந்தார்., பகைப்படை நாட்டிற்குட் புகுந்தது. வாள் உறைக்குட் புகுந்தது (உ.வ.). “வானோர்க் குயர்ந்த வுலகம் புகும்” (குறள். 346). 2. உட்படுதல். “சிறைதளை சங்கிலி புகிலும்” (S.I.I. III, 28). 3. அகப்படுதல். “சூறை புகுவன பாறையே” (தக்கயாகப். 64). 4. காலத்துட் செல்லுதல். “பிராய நூறு மனிதர்தாம் புகுவ ரேனும்” (திவ். திருமாலை, 3). 5. செல்லுதல். 6. தொடங்குதல். “கடனீ ராடுவான்... புகும்” (திவ். இயற். 3 69). 7. நிகழ்தல்.

புகு - புகா = (உட்புகும்) உணவு. “புகாஅக் காலை” (தொல். களவு. 16). புகா - புகவு = 1. புகுகை. “கழுது புகவயர்” (ஐங். 314). 2. உணவு. “பழஞ்சோற்றுப் புகவருந்தி” (புறம். 395).

புகு - வ. புஜ் (bhuj). ஒ.நோ.: பகு - bhaj. புகு - புகல் = 1. புகுகை. “முனைபுகல் புகல்வின்” (பதிற். 84 17). 2. இருப்பிடம். “புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை” (ஐங். 295). 3. உயிருக்கு இருப்பிடமான உடம்பு (பிங்.). 4. கூலம் இடுங்குதிர் (திவா.) 5. அடைக்கலம் “புகலது கூறுகின்றான்” (கம்பரா. விபீடண. 109). 6. துணை (பிங். 7. பற்றுக்கோடு. “மையணற் காளை பொய்புக லாக” (நற். 179). 8. ஆம்புடை (உபாயம்). “புகலொன் றில்லா அடியேன்” (திவ். திருவாய். 6 10 10). 9. போக்கு. அடிக்கடி புகல்சொல்கிறான் (உ.வ.).

புகலி = 1. புகலடைந்த - வன் - வள். 2. ஒரு பெரு வெள்ளக் காலத்திற் புகலிடமாயிருந்த சீகாழி.