புகு - புகார் = ஆறு கடலொடு கலக்குமிடம். “புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்” (புறம். 30). 2. காவிரி கடலொடு கலந்த இடத்துக் காவிரிப்பூம்பட்டினம். “பெரும்பெயர்ப் புகாரென் பதியே” (சிலப். 20 56). புகு - புகுது. புகுதுதல் = 1. உட்செல்லுதல். “பொய் யிலங்கெனைப் புகுதவிட்டு” (திருவாச. 5 92). 2. நிகழ்தல். “வேறொன்றும் புகுதா விட்ட”. (பெரியபு. எறிபத்த. 38). புகுது - புகுதி = 1. மனைவாயில் (பிங்.). 2. நிகழ்ச்சி. “புகுதி யின்னதால்” (கந்தபு. சிங்கமு. 20). 3. நுண்மதி. “புகுதி கூர்ந்துள்ளார் வேதம்” (கம்பரா. முதற் போர். 222). 4. வழி (அரு. நி.). 5. வருவாய் (அரு. நி.). புகுது - புகுரு. புகுருதல் = புகுதல். புகுரு - புகுர் - பூர். பூர்தல் = புகுதல். பூர் - பூரான் = மண்ணிற்குள் விரைந்து புகும் நச்சுப் பூச்சி. புகவொட்டு - புகட்டு. புகட்டுதல் = 1. நீர்ப்பொருளைக் கலத்தில் ஊட்டுதல். குழந்தைக்குச் சங்கில் பால் புகட்டு (உ.வ.). 2. அறிவுறுத்துதல். “செவிதிறந்து புகட்ட” (திருவிளை. விடையிலச். 4). புகட்டு - போட்டு. போட்டுதல் = புகட்டுதல். போட்டுப் பால், குழந்தைக்கு மருந்து போட்டு (உ.வ.). புகவிடு - புகடு. புகடுதல் = வீசியெறிதல். “மரனொடு வெற்பினம் புகட வுற்ற பொறுத்தன” (கம்பரா. நாகபாச. 146). புகு - போ. போதல் = 1. புகுதல். ஊசியின் காதில் இந்த நூல் போகுமா? (உ.வ.). 2. எண்ணில் அடங்குதல். பத்தில் ஐந்து இரண்டு தரம் போகும் (உ.வ.). 3. செல்லுதல். “மாமலர் கொய்ய... யானும் போவல் ” (மணிமே. 3 83). 4. நெடியதாதல், நீளுதல், நேராதல். “வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள” (தொல். உரி. 19) 5. விரிதல். போது = விரியும் பேரரும்பு. 6. பரத்தல். “எதிர்போம் பல்கதிர் ஞாயிற்றொளி” (கலித். 144 40). 7. கூடியதாதல். மூச்சுவிடப் போகவில்லை (உ.வ.). 8. நீங்குதல். குடிபோன வீடு (உ.வ.). 9. ஒழிதல். “பல்போனாலும் சொல் போகுமா? (பழ.). 10. கழிதல். “போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்” (பழ.). போன ஆண்டு மழை பெய்யவேயில்லை (உ.வ.). 11. மறைதல். பொழுது போயிற்று (உ.வ.). 12. முடிவாதல். “இன்ப மாவதே போந்தநெறி |