புழு - புழை = 1. துளை. “தம்பத்தின்மேற் புழையே ழுளவாக்கி” (திருநூற். 23). 2. குழாய் (W.). 3. வாயில். “திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி” (மணிமே. 6 22). 4. சிறுவாயில். “வாயிலொடு புழையமைத்து” (பட்டினப். 287). 5. பலகணி. “சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்” (மதுரைக். 358). 6. ஏவறை. “கவையுங் கழுவும் புதையும் புழையும்” (சிலப். 15 212). 7. நரகம். “போகும் புழையுட் புகுந்து” (ஏலாதி, 11). 8. காட்டுவழி. “கவை முள்ளிற் புழையமைப்பவும்” (புறம். 98). 9. ஒடுக்கவழி. “புழை தொறு மாட்டிய” (மலைபடு. 194). 10. ஆறு. சேரநாட்டு வழக்கு. புழைத்தல் = துளையிடுதல். “அனங்கன் வாளி புழைத்ததம் புணர்மென் கொங்கை” (கம்பரா. கைகேசி. 85). புழைக்கை = 1. தும்பிக்கை. 2. யானை (திவா.). புழைக்கை = பூழ்க்கை - பூட்கை = யானை. “பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கைதேர்” (கம்பரா. முதற்போர். 58). “பூழ்க்கை முகன் மனுவை நனியென்னின்” (விநாயகபு. 14 9). புழை - புடை = 1. துளை. எலிவளை (W.). 3. குகை. 4. குகை போன்ற கிணற்றடிப் புழை. புடை - புடம். ஒ.நோ.: நடை - நடம். நடமாடுதல் = நடந்து திரிதல். நடமாட்டம் = நடந்து திரிகை, உலாவுகை. ஆள் நடமாட்டம் = ஆள்கள் உலாவி வழங்குகை. புடம் = பொன்னைக் காய்ச்சித் தூய்மைப்படுத்தும் சிறு கலம் (ஞானா. 15 2. தொன்னை (இலைக்கலம்) (யாழ். அக.). புடம் - ப. புட (puta). புழை - பூல் = துளை (இலக். அக.). புழை - பூழை = 1. துளை. “புகையும் புகற்கரிய பூழை நுழைந்து” (நாலடி. 282). 2. சிறுவாயில். “புழைத்தலை நுழைந்து” (தேவா. 845 1). புள் - பூள் - பூறு. ஒ.நோ.: கீள் - கீறு. பூறுதல் = துளைத்தல், கிழித்தல், கீறுதல். பூறு - பீறு. ஒ.நோ.: நூறு - நீறு. பீறுதல் = (செ. குன்றாவி.) 1. கிழித்தல். “அல்குற் பூந்துகிற் கலாபம் பீறி” (கம்பரா. ஊர்தே. 189). 2. கீறுதல். “பன்றிக்குமுன் முத்தைப் போட்டால் அவற்றைப் பீறிப் போடும்” (விவிலியம், தமிழ் மொழிபெயர்ப்பு). 3. துளைத்தல். மூக்குப்பூறுதல். 4. பிளத்தல். |