பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

பிண் - பிணகு - பிணங்கு. பிணங்குதல் = 1. மாறுபடுதல். “பிணங்கோ மெவரொடும்” (திருநூற். 66). 2. ஊடுதல்.

இணங்கு என்னும் சொல்லிற்கு எதிராக, அதன் எதுகையாக அமைந்த சொல் பிணங்கு என்பது.

பிணங்கு - பிணக்கு = மாறுபாடு. “பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்” (திருவாச. 30 1).

பிணக்கு - பிணக்கம் = மாறுபாடு. “பாம்பு கங்கை பிணக்கந் தீர்த்து” (தேவா. 29 2). 2. ஊடல்.

புள் - புய். புய்தல் = 1. பறிக்கப்படுதல். “புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை” (களவழி. 39). 2. மறைதல். “கோலப் பகற்களி றொன்றுகற் புய்ய” (திவ். இயற். திருவிருத். 40).

புய்த்தல் = பறித்தல்.

“புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை”        (புறம். 28)

“உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையை
கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை
..............................................
கோடுபுய்க் கல்லா துழக்கு நாட”        (கலித். 38)

“கோட்டினிற் குத்திக் குடற்புய்த் துறுத்து”    (மணிமே. 13 47)

புய் - பிய். பிய்தல் = 1. பிள்ளுதல். 2. பிரிதல். 3. கிழிதல்.

பிய்த்தல் = 1. பிடுதல். 2. கிழித்தல். 3. பிரித்தல். 4. இலை, படம் முதலியவற்றைச் சிதைத்தல். 5. பறித்தல். 6. பிடுங்குதல். “பேயு நாயு மவருடலம் பிய்த்துத் தின்ன” (உத்தரரா. திருவோல. 24). 7. வருத்துதல். 8. பிறன்கோள் மறுத்தல். அவனைப் பிய்த்தெறிந்து விட்டான் (உ. வ.).

பிய் = பியர். பியர்தல் = பெயர்தல். (S. I. I. III, 151 : 4). ம. பியர்.

பியர் - பெயர். பெயர்தல் = 1. இடம்விட்டு நீங்குதல். 2. பிரிதல். நிலம்பெயர்ந் துறைதல் (தொல். பொருள். 169). 3. கிளர்தல். “ஓதநீரிற் பெயர்பு பொங்க” (புறம். 22). 4. உரசித்தேய்தல். 5. சலித்தல். 6. அசைபோடுதல். “விளையா விளங்க ணாற மெல்குபு பெயரா” (சிறுபாண். 45). 7. பிறழ்தல். “நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்” (புறம். 3). 8. மாறுதல் “ஆணெனத் தோன்றி யலியெனப் பெயர்ந்து” (திருவாச. 3 134). 9. தளர்தல். 10. கட்டுவிடுதல். 11. தேய்தல்,